Published : 30 Dec 2022 04:40 AM
Last Updated : 30 Dec 2022 04:40 AM
வேலூர்: ‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலியாக கஸ்பா மாநகராட்சி தொடக்கப் பள்ளி சுற்றுச்சுவரில் ஆபத்தான முறையில் வளர்ந்திருந்த அரச மரம் வேரோடு அகற்றப்பட்டது.
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 41-வது வார்டு கஸ்பா பகுதியில் செயல்படும் மாநகராட்சி தொடக்கப்பள்ளி சுற்றுச் சுவர் பகுதியில் அரச மரம் பெரியளவில் வளர்ந்திருந்தது. மரத்தின் வேர் வேகமாக பரவியதால் பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமாகியிருந்தது. எந்த நேரத்திலும் சுற்றுச்சுவர் விழும் என்பதால் அரச மரத்தை வேரோடு முழுமையாக அகற்றி அந்த இடத்தில் மீண்டும் பள்ளி சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பல்வேறு மட்டங்களில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப் படுகிறது. மழைக்காலம் என்பதால் சுற்றுச்சுவர் எந்த நேரத்திலும் விழும் ஆபத்து இருப்பதாகவும், சுற்றுச்சுவர் அருகில் பொதுமக்கள் குடிநீர் பிடித்துச் செல்வதால் ஆபத்தாக வளர்ந்துள்ள அரச மரத்தை அகற்ற வேண்டும் என தெரிவித்தனர்.
இது தொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் நேற்று முன்தினம் (28-ம் தேதி) படத்துடன் செய்தி வெளியானது. இந்த செய்தியின் அடிப்படையில் வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் உத்தரவின்பேரில் சென்ற மாநகராட்சி அதிகாரிகள் ‘பொக்லைன்’ இயந்திரத்தின் உதவியுடன் ஆபத்தான முறையில் வளர்ந்திருந்த அரச மரத்தை வேரோடு அகற்றினர்.
மேலும், அரச மரம் அகற்றியதால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சுவர் சேதத்தை சீரமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். ‘இந்து தமிழ் திசை’ செய்தியின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட மாநகராட்சி அதிகாரிகளை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT