Last Updated : 29 Dec, 2022 04:17 PM

 

Published : 29 Dec 2022 04:17 PM
Last Updated : 29 Dec 2022 04:17 PM

புதுச்சேரியிலும் ரூ.1,000 உடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குக” - திமுக வலியுறுத்தல்

கோப்புப் படம்

புதுச்சேரி: தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் ரூ.1,000 பரிசுத் தொகையுடன் பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டுமென்று அரசுக்கு திமுக அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று கூறியது: ‘‘புதுச்சேரி அரசு ஒவ்வொரு பொங்கலுக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகின்ற பொங்கல் தொகுப்பை இந்த ஆண்டும் அறிவிப்பு செய்துள்ளது. ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் வெறும் ரூ.500 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு அளிப்பதாக கூறி இருப்பது மக்களை மிகப் பெரிய ஏமாற்றத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.

அண்டை மாநிலமான தமிழகத்தில் தமிழ் மக்கள் தமிழர் திருநாள் பண்டியை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு இவைகளோடு ரூ.1,000 தொகுப்பை வழங்குவதென்று அறிவிப்புச் செய்து அதற்கான டோக்கன் விநியோகம் வரும் ஜன. 3-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி அரசின் வெறும் ரூ.500 என்பது கண் துடைப்பாகவும், மக்களின் ஆசையை நிராகரிக்கின்ற செயலாகவும் அமைந்துள்ளது. 2 கோடிக்குமேல் குடும்ப அட்டைகள் உள்ள தமிழகத்தில் இவ்வளவு பெரிய திட்டத்தை செயல்படுத்தும்போது வெறும் 3.50 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.500 அளிப்பது என்பது ஏமாற்றும் வித்தையாகும்.

புதுச்சேரி மாநிலம் முன்னேற்றப் பாதையில் செல்கிறது என்றும், பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றி அமைக்கிறோம் என்றும் வாய் சவடால் பேசும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அரசு இப்படிப்பட்ட வஞ்சனையை தமிழ் மக்களுக்கு செய்யக் கூடாது. ஆகவே தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பை விரைவில் வழங்க நடவடிக்கை வேண்டும்.

அதேபோல், கடந்த நான்கு மாதங்களாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் அரிசிக்கு பதிலாக பணம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதனை காலம் தாழ்த்தாமல் பொங்கலுக்கு முன்பாகவே வழங்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் ரேஷன் அரிசித் தொகையை பணமாக வழங்காமல், அரிசியாக வழங்க வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சமீபத்தில் முதல்வரை பொதுமக்கள் முற்றுகையிட்டு இதே கோரிக்கையை வலியுறுத்தினர். மத்தியில் ஆளுகின்ற பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள என்.ஆர்.காங்கிரஸ் பணத்துக்கு பதிலாக அரிசி போடுவதற்குக் கூட நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பது இவர்களின் இயலாமையையும், மக்கள் மீது அக்கறையின்மையையும் காட்டுகிறது.

இனிவரும் காலங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்க வேண்டும். அதேபோல், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டிய பண்டிகைகால வேட்டி, சேலை திட்டத்தின் தொகையையும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக காலத்தோடு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x