Published : 29 Dec 2022 03:54 PM
Last Updated : 29 Dec 2022 03:54 PM

“விமர்சனம் வரத்தான் செய்யும்...” - உதயநிதியின் அமைச்சர் பதவி குறித்து ஸ்டாலின் பேச்சு

திருச்சி அரசு நிகழ்ச்சியில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள்

சென்னை: “அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றபோது விமர்சனம் வந்தது. விமர்சனம் வரத்தான் செய்யும். அவருக்கு ஏராளமான பொறுப்புகள் இருக்கிறது” என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசினார்.

திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "திருச்சியில் எது நடந்தாலும், அது பிரமாண்டமாகத்தான் நடக்கும். சிறிய விழாவாக இருந்தாலும், அது பெரிய அரசு விழாவாகத்தான் நடக்கும். பெரிய பொதுக்கூட்டமாக இருந்தாலும், அதனை மாபெரும் மாநாடாகத்தான் திருச்சியில் காணலாம். மாநாடு என்று அறிவித்தால், பிரமாண்டமான மாநாடாகத்தான் நடக்கும். அப்படி நடந்தால்தான் அது திருச்சி. அப்படி நடத்தினால்தான் அது கே.என்.நேரு. அந்தப் புகழை, இந்த நிகழ்ச்சியின் மூலமாகவும் அவர் நிரூபித்துக் காட்டி இருக்கிறார். நகராட்சி நிர்வாகத் துறையின் மூலமாக தமிழ்நாட்டினுடைய உள்கட்டமைப்பு வசதிகள் இன்றைக்கு ஏராளமாகச் செய்து வருபவர் தான் அமைச்சர் நேரு.

தமிழ்நாட்டின் தொழில்துறை என்பது மிக வேகமாக முன்னேற்றத்தை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டை நோக்கி புதிய தொழிற்சாலைகள் வரத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல, உலக நிறுவனங்களும் தமிழ்நாட்டை நோக்கி இன்றைக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள். புதிய புதிய துறைகளில் முதலீடுகளை இன்றைக்கு நாம் ஈர்த்து வருகிறோம். இதை, கடமையே கண்ணாக நினைத்துச் செயல்படுத்தி வரக்கூடியவர் தான் இங்கு வந்திருக்கக்கூடிய நம்முடைய தொழில் துறை அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசு. எனவே, அவரையும் நான் பாராட்டுகிறேன்.

நம்முடைய கழக ஆட்சி அமைந்ததும் மக்களைத் தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டம் தொடங்கப்பட்டது. ஏழை - எளிய மக்கள் உடல்நலம் பாதிக்கப்படும்போது வெளியூருக்கு வந்து சிகிச்சை பெற வாய்ப்பு வசதி இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு, அவர்களது வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்கக்கூடிய மகத்தான திட்டம்தான், இந்தத் திட்டம். இந்த ஓராண்டு காலத்தில் ஒரு கோடிப் பேருக்கு நமது அரசாங்கம் இத்தகைய சிகிச்சையை அளித்துள்ளது. இது சாதாரண சாதனை அல்ல; மாரத்தான் போல் நெடிய தொடர் ஓட்டத்தால் நிகழ்ந்துள்ள சாதனை.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருக்கும் அருமை நண்பர் மா.சுப்பிரமணியன், ஒரு மாரத்தான் ஓட்ட வீரர் என்பது அனைவரும் அறிந்த உண்மை. சாலையில் மட்டுமல்ல, துறையின் செயல்பாடுகளிலும் மாரத்தான் போல் நெடுந்தூரம் களைப்பின்றி பயணித்து இலக்குகளை அடைந்து காட்டக்கூடியவர்தான் என்பதை இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். ஒரு கோடிப் பேருக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டில், தேவைப்படும் அனைத்து மக்களுக்கும் உரிய சிகிச்சை அளிக்கும் திட்டமாக அதனை நிகழ்த்திக் காட்ட இருக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியனை, உங்கள் அனைவரின் சார்பில் நான் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக, எழுச்சியோடு ஏற்பாடு செய்திருக்கக்கூடிய அமைச்சர் நேருவையும், அதற்கு உறுதுணையாக இருந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் பாராட்டுகிறேன். எனது அருமை நண்பர், உயிர் நண்பர் அன்பில் பொய்யாமொழியை நினைவூட்டக்கூடிய வகையில், அவரது பெயரை நிலைநாட்டக்கூடிய வகையில் அன்பில் மகேஸ் செயல்பட்டு வருகிறார். பள்ளிக் கல்வித் துறையை, இந்தியாவிலேயே மிகச் சிறந்த துறையாக ஆக்க நித்தமும் உழைத்துக் கொண்டு இருக்கிறார் தம்பி அன்பில் மகேஸ்.

அதேபோல், இந்த மேடைக்குப் புதியவராக, அமைச்சரவைக்கு புதியவராக வருகை தந்துள்ள தம்பி உதயநிதி. அமைச்சரவைக்குத்தான் புதியவரே தவிர, உங்களுக்கு நன்கு அறிமுகமானவர், உங்களுக்கு பழைய முகம்தான். அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றபோது விமர்சனம் வந்தது. விமர்சனம் வரத்தான் செய்யும். இப்படி விமர்சனங்கள் வந்தபோது, 'என்னுடைய செயல்பாட்டைப் பாருங்கள், அதன்பிறகு விமர்சியுங்கள்' என்றார். அவர் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றபோதும் விமர்சனங்கள் வந்தது. ஆனால் அதற்கெல்லாம் தன்னுடைய செயல்பாடுகளால் பதில் சொல்லி, அனைவரது பாராட்டையும் பெற்றார், தன்னை நிரூபித்துக் காட்டினார்.

உதயநிதிக்கு ஏராளமான பொறுப்புகள் இருக்கிறது. இளைஞர் நலன், விளையாட்டு, மகளிர் மேம்பாடு, சிறப்புத் திட்டச் செயலாக்கம், வறுமை ஒழிப்பு, கிராமப்புறக் கடன்கள் ஆகிய முக்கியமான துறைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தமிழ்நாட்டின் ஏழை எளிய, விளிம்புநிலை மக்களை மேம்படுத்தக்கூடிய துறைகள். இவைதான் அவரிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர் பொறுப்பில் சிறப்பாகப் பணியாற்றி இந்தத் துறைகளை மேம்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக இருக்கிறது. மேம்படுத்த வேண்டும் என்பதை முதல்வராக நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறேன்.

நான் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் இருந்தபோது, இந்த மகளிர் சுய உதவிக்குழுவினுடைய துறையை என் கைவசம் வைத்திருந்தேன். இன்றைக்கு தம்பி உதயநிதி கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. எனவே, அதற்காக தம்பி உதயநிதியை நான் உங்கள் அனைவரின் சார்பில் கேட்டுக் கொள்ள விரும்புவது, இந்த சுய உதவிக் குழுக்களை மேம்படுத்தக்கூடிய வகையில் நீங்கள் அதற்காக பாடுபட வேண்டும், பணியாற்ற வேண்டும், அதற்குரிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் நீங்கள் தொடர்ந்து நடத்திட வேண்டும் என்று என்னுடைய அன்பான வேண்டுகோளை மாத்திரம் இந்த நேரத்தில் எடுத்துவைத்து விடைபெறுகிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x