Last Updated : 29 Dec, 2022 03:19 PM

 

Published : 29 Dec 2022 03:19 PM
Last Updated : 29 Dec 2022 03:19 PM

தமிழிசையை மிரட்டவே மாநில அந்தஸ்தை ரங்கசாமி ஆயுதமாக பயன்படுத்துகிறார்: வைத்திலிங்கம் குற்றச்சாட்டு

வைத்திலிங்கம் எம்.பி.

புதுச்சேரி: துணைநிலை ஆளுநர் தமிழிசையை மிரட்டவே மாநில அந்தஸ்து கோரிக்கையை ரங்கசாமி ஆயுதமாக பயன்படுத்துகிறார் என்று எம்.பி வைத்திலிங்கம் குற்றம்சாட்டினார். மாநில அந்தஸ்து கேட்போர் மீதும், மதுக்கடை எதிர்ப்போர் மீதும் கடுமையான சட்டநடவடிக்கை பாய்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதுச்ச்சேரி காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியது: ''மாநில அந்தஸ்து விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக இடையே கருத்து வேறுபாடு உள்ளது. புதுவையின் நிர்வாக தலைமையாக இருக்கும் துணை நிலை ஆளுநர், மாநில அந்தஸ்தில் கிடைப்பதெல்லாம் இப்போதே கிடைக்கிறது என்கிறார். ஆனால், முதல்வர் ரங்கசாமியோ, அதிகாரம் தேவை என கூறுகிறார். உண்மையிலேயே மாநில அந்தஸ்தை பெறுவதற்கான முயற்சியில்தான் ரங்கசாமி உள்ளாரா என்ற கேள்வி எழுகிறது.

ஆளுநர் தமிழிசையும், மத்திய அரசையும் மிரட்டுவதற்காக மாநில அந்தஸ்தை ஆயுதமாக பயன்படுத்துகிறாரா? அண்ணன் - தங்கையாக இருந்தாலே பாகப் பிரிவினை, பங்கு பிரிவினை இருக்கத்தான் செய்யும். வரும் ஆண்டிலாவது முதல்வர் ரங்கசாமி நிலையான முடிவை இவ்விவகாரத்தில் தெரிவிக்க வேண்டும். புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டுமா என்பதை முதல்வரும் என்.ஆர்.காங்கிரசும் மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். மாநில அந்தஸ்து பெற அரசு ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள் எனவும் தெரிவிக்க வேண்டும்.

மாநில அந்தஸ்தில் சுயேச்சை எம்எல்ஏவை தூண்டிவிடுவது, பிற கட்சியினரை துாண்டுவது போன்ற நிலைப்பாட்டை கைவிட வேண்டும். நேரடியாக முதல்வரே களம் இறங்க வேண்டும். அப்படி முதல்வர் ஆக்கபூர்வ நடவடிக்கை எடுத்தால் நாடாளுமன்றத்திலும், வெளியிலும் காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும். வீதிக்கு வீதி திறக்கப்படும் ரெஸ்டோ பார் மதுக்கடைகளால் மக்கள் போராட்டம் ஏற்பட்டுள்ளது. ரேஷன் கடை இருந்த இடமெல்லாம் மதுக்கடைகள் திறந்து வருகின்றனர். இதில் சில மதுக்கடைகளில் பெண்களுக்கு இலவச மது என விளம்பரப்படுத்துகின்றனர்.

இதுவரை ஆண்களை குறிவைத்து நடந்த மது வியாபாரம் தற்போது பெண்களுக்கு குறிவைத்துள்ளது. இது குடும்பங்களை அழிக்கும் முயற்சி. எனவே மதுக்கடைகளின் எண்ணிக்கை, நேரத்தை குறைக்க வேண்டும். மாநில அந்தஸ்து கேட்பவர்கள் மீதும், மதுக்கடை எதிர்ப்பு போராளிகள் மீதும் கடுமையான சட்டங்கள் பாய்கிறது. மதுக்கடை உரிமையாளர்களுக்கு அரசு துணை செல்கிறது. இதுதான் பிரதமர் மோடி அறிவித்த பெஸ்ட் புதுவையா - அமித்ஷா அறிவித்த எக்சலன்ட் புதுவையா? இதற்காகத்தான் மாநில அந்தஸ்து கேட்கிறார்களா என முதல்வர் தெளிவுப்படுத்த வேண்டும்'' என்று வைத்திலிங்கம் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x