Published : 29 Dec 2022 05:04 AM
Last Updated : 29 Dec 2022 05:04 AM

நாட்டில் முதல்முறையாக ‘நீலகிரி வரையாடு திட்டம்' - ரூ.25 கோடியில் தமிழக அரசு செயல்படுத்துகிறது

சென்னை: தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு இனத்தைப் பாதுகாக்கவும், அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும் நாட்டிலேயே முதல்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை ரூ.25.14 கோடி மதிப்பில் செயல்படுத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: நீலகிரி வரையாடு, மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரித்தான சிறப்புகளில் ஒன்றாகும். வரையாடு இனத்தைப் பாதுகாக்கவும், அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும், நாட்டிலேயே முதல்முறையாக 'நீலகிரி வரையாடு திட்டம்' ரூ.25.14 கோடியில் செயல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி வரையாடு திட்டம், பல்வேறு உத்திகள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. ஆண்டுக்கு இருமுறை ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு, டெலிமெட்ரிக் ரேடியோ காலரிங் (collaring) பொருத்தி தொடர்ந்து பாதுகாத்தல், நோய்களைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட வரையாட்டுக்கு சிகிச்சை அளித்தல், ஒவ்வோர் ஆண்டும் அக்.7–ம் தேதியை ‘வரையாடு தினம்’ என அனுசரித்தல், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் நீலகிரி வரையாடுகள் இனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நீலகிரி வரையாடு இனம், இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தால், அழிந்து வரும் உயிரினம் என்று வகைப்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது. 3,122 வரையாடுகள் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை இவை வாழ்விடமாகக் கொண்டுள்ளன. மிகப் பரந்த அளவில் வாழ்ந்து வந்த இந்த வரையாடு இனம், எண்ணிக்கை குறைந்து அழிவுக்கு உள்ளாதல், அந்நிய களைச்செடிகளின் ஆக்கிரமிப்பு, காட்டுத் தீ, பிற மானுடவியல் அழுத்தங்கள், சுற்றுச்சூழல் தரவு மற்றும் பாதுகாப்பு திட்டமிடலுக்கான புரிதல் இல்லாமை போன்ற காரணங்களால் தற்போது தமிழகம், கேரளாவுக்குள், சில சிதறிய வாழ்விடப் பகுதிகளில் மட்டுமே வாழ்ந்து வருகின்றன.

இந்த புதிய திட்டம் மூலம், அவற்றின் உண்மையான வாழ்விடங்கள் மீட்கப்பட்டு, அவற்றுக்குரிய வாழ்விடங்களில் இந்த இனங்கள் மீள் அறிமுகம் செய்யப்பட்டு, நீலகிரி வரையாடுகள் வாழ ஏதுவான சூழலை உருவாக்கி, அவற்றின் எண்ணிக்கை பெருக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x