

ஆன்மிக நகரமான பழனி மலையையும், சர்வதேச சுற்றுலாத் தலமான கொடைக்கானலையும் இணைக்கும் வகையில் பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு 25 கி.மீ. தொலைவுக்கு சுற்றுலா ரோப்கார் அமைக்கும் திட்டம் ஆய்வுப் பணியுடன் நிற்கிறது. இதனால் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஆங்கிலேய ஆட்சியாளர்கள் தங்கள் பொழுதுபோக்குக்காக உருவாக்கிய சுற்றுலா தலங்களையே கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தற்போதுவரை பார்த்து ரசித்து வருகின்றனர். கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் புதிய சுற்றுலா திட்டங்கள் ஏதும் உருவாக்கப்படாததால், கொடைக்கானலுக்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பிரையண்ட் பார்க், படகு குழாம், வெள்ளி நீர்வீழ்ச்சி, பைன் காடுகள், குணா குகைகள், கொடைக்கானல் வானிலை ஆய்வுக் கூடம், தூண் பாறைகள் உள்ளிட்ட பார்த்த இடங்களையே மீண்டும் மீண்டும் பார்த்து அலுத்துப் போய் உள்ளனர்.
கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களைப் பாதுகாப்பாக நிறுத்த பார்க்கிங் வசதி, சாமானிய மக்களும் தங்குவதற்கு விடுதிகள், உணவுக் கட்டணம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் ஒரு முறை வந்த சுற்றுலாப் பயணிகள் மீண்டும் வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
பெரும் எதிர்பார்ப்பு
இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பழனி தேக்கம்தோட்டம் என்னும் இடத்தில் இருந்து கொடைக்கானல் வில்பட்டி வழியாக கொடைக்கானலுக்கு சுற்றுலா ரோப்கார் அமைக்கும் திட்டம் அமைக்க, பழனி தேவஸ்தானம், தமிழ்நாடு சுற்றுலாத் துறை மற்றும் வனத்துறை சார்பில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ரோப்கார் திட்டம், சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு செல்வதற்கு சாலை வழியாக 67 கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்ய வேண்டும்.
இதுவே, ரோப்கார் மூலம் நேரடியாக பழனி தேக்கம் தோட்டத்தில் இருந்து 25 கி.மீட்டரிலேயே கொடைக்கானலை சென்றடையலாம். இதனால் பயண தூரமும் நேரமும் மிச்சமாகிறது.
தற்போது கொடைக்கானலில் சுற்றுலாவுக்கு வரும் நடுத்தர, ஏழை மக்கள் தங்குவதற்கு வசதி இல்லாததால் வரத் தயங்குகின்றனர். ரோப்கார் திட்டம் செயல்படுத்தினால் பழனியில் தங்கிவிட்டு கொடைக்கானல் செல்வதற்கு வசதியாக இருக்கும். ரோப்காரில் செல்லும்போது, சுற்றுலாப் பயணிகள், பழனி மலை, கொடைக்கானல் பசுமைப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட இயற்கை அழகு நிறைந்த இடங்களை ரசித்துச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
மேலும் பழனிக்கு வரும் பக்தர்கள், கொடைக்கானலுக்கும், கொடைக்கானல் சுற்றுலா வரும் பக்தர்கள் பழனிக்கும் வந்து செல்வர். அதனால், சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலை சார்ந்து ஆன்மிக நகரமான பழனியும் சுற்றுலாத் துறையில் வளர்ச்சி பெறும் வாய்ப்பு ஏற்பட்டது.
தற்போது இந்தத் திட்டத்தை தயாரித்த, ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் இடம் மாறுதலாகி சென்றதால், ஆய்வுப் பணிகளுடன் அந்தரத்தில் நிற்கிறது இந்தத் திட்டம். இதனால் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பழனி தேவஸ்தானம், சுற்றுலாத் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, வனப்பகுதிகளில் 25 கி.மீ. தொலைவுக்கு ரோப்கார் திட்டம் அமைக்க சாத்தியம் இல்லை எனக் கைவிடப்பட்டது. இது ஆய்வுடன் நிற்கிறது என்றனர்.