Published : 29 Dec 2022 04:37 AM
Last Updated : 29 Dec 2022 04:37 AM
சென்னை: ஊதிய முரண்பாட்டைக் களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 2-வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன்1-ல் பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொருஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் 20,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் 2-வது நாளாக நேற்றும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2,500 பேர் பங்கேற்று தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதற்கிடையே போராட்டத்தில் திடீரெனஆசிரியர்கள் சிலர் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ஆசிரியர்கள் கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து எஸ்எஸ்டிஏ பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் கூறும்போது, ``ஊதிய முரண்பாட்டைக் களைய வலியுறுத்தித் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறோம். இதுவரை 36 ஆசிரியர்கள் மயக்கம் அடைந்துள்ளனர். அவர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். எங்களது கோரிக்கைநிறைவேற்றும் வரையில், போராட்டம் தொடரும். பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக உள்ளோம். தமிழக முதல்வர் தலையிட்டு, எங்களது கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும்'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT