Published : 29 Dec 2022 04:40 AM
Last Updated : 29 Dec 2022 04:40 AM
சென்னை: நடப்பு நிதியாண்டின், 2-வது அரையாண்டு சொத்து வரியை, வட்டிஇன்றி செலுத்துவதற்கான அவகாசத்தை வரும் ஜன.15-ம்தேதி வரை நீட்டித்து சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மாமன்றக்கூட்டம், மேயர் ஆர்.பிரியா தலைமையில், ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை மேயர் மு.மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநகராட்சி பகுதிகளில் இயங்கும் அறக்கட்டளை மருத்துவமனைகளுக்கு சொத்து வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், நடப்பு நிதியாண்டில், 2-வது அரையாண்டு சொத்து வரியை, 2 சதவீதம் தனி வட்டி இன்றி செலுத்துவதற்கான அவகாசத்தை வரும்ஜன.15-ம் தேதி வரை நீட்டித்தல்,
நிலுவையில் உள்ள மழைநீர் வடிகால் பணிகளை முடிப்பதற்கான அவகாசம் வரும் மார்ச்30 வரை நீட்டித்தல், ரூ.5 கோடியே38 லட்சத்தில் புளிந்தோப்பு பகுதியில் நவீன நாய் இனக்கட்டுப்பாட்டு மையம் அமைத்தல், சோழிங்கநல்லூர், மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் விரைவில் தொடங்கப்பட உள்ள நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்களுக்குத் தேவையான கால்நடை மருத்துவர்களை நியமித்தல், மருத்துவமனைக்குத் தேவையான செலவினங்களை ரூ.92 லட்சத்து 85ஆயிரத்தில் மேற்கொள்ள அனுமதிவழங்கல்.
கரோனா, டெங்கு, மலேரியா போன்ற நோய்களைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 100 சுகாதார ஆய்வாளர்களின் பணிக்காலம் மேலும்ஓராண்டுக்கு நீட்டிக்க அனுமதிவழங்கல் உள்ளிட்ட மொத்தம் 80 தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தமிழில் பிறப்பு சான்று: கூட்டத்தில் நிலைக்குழு தலைவர் (கணக்கு) க.தனசேகர் பேசும்போது, ``மாநகராட்சி சார்பில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 53 அம்மா குடிநீர் மையங்களால் ஏழைகள் பயன்பெறவில்லை. வணிக ரீதியில் தொழில்செய்வோர் தான் பயனடைகின்றனர். எனவே இதை முறைப்படுத்த வேண்டும்'' என்றார். மேலும் கவுசிலர்கள் பலர் தங்கள் வார்டு சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
பின்னர் மேயர் பிரியா பதில் அளித்துப் பேசும்போது, ``அம்மா குடிநீர் மையங்களில் குறைபாடுகள் சரி செய்யப்படும். பிறப்பு சான்றுகள் தமிழில் வெளியிட மாநில சுகாதாரத் துறையுடன் பேசி முடிவு செய்யப்படும். தூய்மைப் பணியாளர்கள் மரணமடைந்தால், மாமன்ற கூட்டத்தில் அவர்களுக்கு 2 மணித் துளிகள் மவுன அஞ்சலி செலுத்தி, இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்படும். சென்னையில் உள்ள மாடுகளுக்கு, கால்நடைத் துறை உதவியுடன், மாநகராட்சி சார்பில் தடுப்பூசிகள் போட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கொசுத் தொல்லை அதிகம் உள்ள பகுதிகளில் புகை மருந்துபரப்பவும், தேவையான கருவிகளை அனுப்பவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மேயர் கூறினார்.
அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு: மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பேசும்போது, "சென்னையில் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கும் பணி ஜனவரியில் தொடங்கும். அதற்காக அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாதவரம் ஏரி, கால்நடைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அதைச் சீரமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT