

மைசூரு நீதிமன்ற குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக மதுரையில் கைதானவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வுப் பிரிவு (என்ஐஏ) போலீஸார் அதிரடி சோதனை செய்தனர். இதில் வெடிபொருட்கள், சிம் கார்டுகளை கைப்பற்றியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆந்திராவில் சித்தூர், நெல்லூர், கேரளாவில் கொல்லம், மலப்புரம், கர்நாடகாவில் மைசூரு ஆகிய இடங்களில் நீதிமன்ற வளாகங்களில் இந்த ஆண்டு அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.
மைசூரு நீதிமன்ற குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரித்தனர். இதில் மதுரை யைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப் பது தெரியவந்தது. இதையடுத்து தேசிய புலனாய்வுப் பிரிவு எஸ்பி பிரதீபா அம்பேத்கர் தலைமையிலான போலீ ஸார் சில நாட்களுக்கு முன் மதுரையில் முகாமிட்டு, சந்தேக நபர்களின் செல்போன் உரையாடல்களை தீவிரமாகக் கண்காணித்தனர்.
அப்போது, மைசூரு நீதிமன்ற குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக அல் காய்தா அமைப்பின் அடிப்படை வாத இயக்கமான ‘பேஸ் மூவ்மெண்ட்’ டைச் சேர்ந்த மதுரை அப்பாஸ் அலி, சம்சுதீன், அயூப் அலி, கரீம் ராஜா ஆகி யோரை மதுரையிலும், மதுரை பொறி யாளர் தாவூத் சுலைமான் என்பவரை சென்னையிலும் நவ.28-ல் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் பெங்களூருவில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 1-ம் தேதி ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், இவர்களை என்ஐஏ போலீஸார் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். அப்போது கிடைத்த சில தகவல்களின் அடிப்படையில் என்ஐஏ எஸ்பி பிரதீபா அம்பேத்கர் தலைமையில் 6 பேர் அடங்கிய குழுவினர் கடந்த 3 நாட்களுக்கு முன் மீண்டும் மதுரை வந்தனர். அவர்கள் தாவூத் சுலைமான் உட்பட 5 பேரின் வீடுகளிலும் உள்ளூர் போலீஸார் உதவியோடு சோதனை செய்தனர்.
இது தொடர்பாக தேசிய புலனாய் வுப் பிரிவு போலீஸார் கூறியதாவது:
தாவூத் சுலைமான் வீட்டுக்கு என்ஐஏ குழுவினர் நேற்று முன்தினம் வந்தனர். அவர்கள் தாவூத் சுலைமான் வீட்டில் சோதனை செய்ய முயன்றனர். அப்போது சுலைமான் குடும்பத்தினர் தடுத்தனர். இதன்பிறகு உள்ளூர் போலீஸார் துணையுடன் சோதனை செய்தனர்.
அப்போது தாவூத் சுலைமான் வீட்டில் செல்போன், சிம் கார்டுகளை கைப்பற்றியுள்ளனர். அப்பாஸ் அலி, கரீம் ராஜா வீடுகளில் நடத்திய சோதனையில் வெடிபொருட்கள், சில எலக்ட்ரானிக் பாகங்களை எடுத்துள்ளனர். சம்சுதீன் வீட்டுக்குச் சென்ற போலீஸ் குழுவினர் அவரது தங்கை கணவரின் செல்போனை ஆய்வு செய்தனர். இந்த சோதனையின்போது அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் உடனிருந்தனர் என்றனர்.