Published : 16 Dec 2016 02:51 PM
Last Updated : 16 Dec 2016 02:51 PM

மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: மத்திய அரசை பின்பற்ற தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் மசோதாவை வரவேற்றுள்ள திமுக பொருளாளர் ஸ்டாலின், "மத்திய அரசைத் தொடர்ந்து, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தவும், காலிப் பணியிடங்களை நிரப்பவும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "மாற்றுத் திறனாளிகளின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு மாநிலங்களவையில் நிறைவேற்றியிருக்கும் புதிய மசோதாவில், மாற்றுத் திறனாளிகளின் வகை 7-ல் இருந்து 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளதும், அரசு வேலைவாய்ப்பில் அவர்களுக்கான இடஒதுக்கீடு மூன்று சதவீதத்திலிருந்து நான்கு சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதும், உயர்கல்வியில் 3 சதவீத இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதையும் வரவேற்கிறேன். மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகள் அவர்களின் நலனுக்கு மேலும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழகத்தில் திமுக அரசு இருந்தபோதுதான் மாற்றுத் திறனாளிகளுக்கு என்று தனியாக ஒரு துறை முதல்வரின் நேரடிப் பார்வையில் உருவாக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முதலாக மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் முதல்வர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது.

"ஊனமுற்றோர்" என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் முடிவிற்கு இணங்க "மாற்றுத் திறனாளிகள்" என்று அழைத்ததும் தலைவர் கருணாநிதி தலைமையிலான அரசுதான் என்பதை இங்கே பதிவு செய்வது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

அது மட்டுமின்றி, அரசு வேலை வாய்ப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சதவீத இட ஒதுக்கீட்டின்படி நியமனம் செய்வதற்கு, "சிறப்பு நேர்வாக" (Special Drive) தேர்வு நடத்தியதும், அந்த இட ஒதுக்கீடு முறைப்படி அமல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க உயர்மட்டக் குழு அமைத்ததும் திமுக ஆட்சியில்தான்.

ஆகவே மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக திமுக்அ அரசு பாடுபட்டது போல் தற்போது இருக்கும் அதிமுக அரசும் பாடுபட வேண்டும் என விரும்புகிறேன்.

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவைத் தொடர்ந்து தமிழக அரசும் மாற்று திறனாளிகளுக்கு உயர்கல்வியில் உள்ள 3 சதவீத இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தியும், மாநிலத்தில் உள்ள அரசு வேலை வாய்ப்புகளில் இருக்கும் மூன்று சதவீத இட ஒதுக்கீட்டை நான்கு சதவீதமாக உயர்த்தவும் முன் வர வேண்டும் எனவும், காலியாக இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசுப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x