Published : 28 Dec 2022 04:00 AM
Last Updated : 28 Dec 2022 04:00 AM

முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2-வது அறுவை சிகிச்சை: அலைபேசி மூலம் முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்

முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியா 2 -வது அறுவை சிகிச்சைக்காக மீண்டும் தண்டலம் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை நேற்று பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் சந்தித்து, நலம் விசாரித்தார்.

திருவள்ளூர்: முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியா 2-வதுஅறுவை சிகிச்சைக்காக மீண்டும்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அச்சிறுமியிடம், முதல்வர் ஸ்டாலின், அலைபேசி மூலம் நலம் விசாரித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ், இவரது மனைவி சவுபாக்யா. இத்தம்பதியின் மகள் டானியாவுக்கு, அறிய வகை முகச்சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டது.

அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனக்கு உதவிக்கரம் நீட்டுமாறு முதல்வருக்கு சிறுமி டானியா கோரிக்கை விடுத்திருந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த சிறுமிக்கு உடனடியாக சிகிச்சையளிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் அவருக்கு அறுவைசிகிச்சை நடைபெற்று இல்லம் திரும்பினார்.

இந்நிலையில், டானியா, மிக சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்த பக்கமுள்ள கண் மூடவும், சாப்பிடுவதற்கு வாய் திறக்கவும் சிரமப்பட்டு வந்தார். ஆகவே, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண 2-வது அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக டானியா நேற்று முன்தினம் மீண்டும் தண்டலம் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சில நாட்கள் மருத்துவர்களின் முழு கண்காணிப்பில் இருந்து முழு உடல் பரிசோதனைக்குப் பிறகு முக சீரமைப்பு செய்யப்பட்ட பகுதியில் டானியாவுக்கு 2-வது அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. இந்நிலையில், நேற்று காலை பால்வளத் துறை அமைச்சர் சா.மு நாசர், மருத்துவமனைக்குநேரில் சென்று, டானியாவை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது. அமைச்சர் சா.மு.நாசரை அலைபேசி தொடர்பு கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறுமி டானியாவின் மருத்துவ சிகிச்சை குறித்து விவரங்களை கேட்டறிந்தார்.

தொடர்ந்து, அவர், அமைச்சரின் அலைபேசி வாயிலாக டானியாவிடம் நலம் விசாரித்தார். டானியாவின் தாயிடம் பயப்படாமல் தைரியமாக இருக்குமாறு ஆறுதல் கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுமி டானியாவிடம் அலைபேசி மூலமாக பேசி நலம் விசாரித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x