

சென்னையில் ‘வார்தா’ புயலால் இழந்த பசுமை போர்வையை மீட்டெடுப்பதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் உள்ள பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அழைத்து நேற்று ஆலோசனை நடத்தியுள்ளது.
சென்னை மாநகரம் 426 சதுர கிமீ பரப்பை கொண்டது. அதில் 144 சதுர கிமீ (33.3 சதவீதம்) பரப்புக்கு பசுமை போர்வை இருக்க வேண்டும். ஆனால் ‘வார்தா’ புயலுக்கு முன்பு 9 சதுர கிமீ (6.25 சதவீதம்) பரப்பில் மட்டுமே பசுமை போர்வை இருந்தது.
இந்நிலையில் “வார்தா” புயல் வீசிய பிறகு, சென்னையில் வரலாறு காணாத வகையில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. சென்னை மாநகராட்சி கணக்குப்படி சாலைகள், பூங்காக்கள், அரசு கட்டிடங்கள் ஆகியவற்றில் 17 ஆயிரத்து 157 மரங்கள் விழுந்துள்ளன. ஆனால் தனி நபர் வீடுகள், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஐஐடி வளாகம், பிரம்மஞான சபை வளாகம் உள்ளிட்டவை சேர்த்து சுமார் 1 லட்சம் மரங்கள் விழுந்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பசுமை போர்வையின் சதவீதம் கடுமையாக குறைந்து, சென்னையில் வெப்பம் அதிகரிப்பு, காற்று மாசு, சுவாசிக்க தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை பொதுமக்கள் சந்திக்க நேரிடும்.
இந்நிலையில் சென்னையில் புயல், வெள்ளம், வறட்சி ஆகிய மூன்றையும் தாங்கும் மரங்களை வைத்து, புயலால் இழந்த பசுமை போர்வையை மீட்டெடுப்பது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களை ரிப்பன் மாளிகைக்கு அழைத்து மாநகராட்சி நிர்வாகம் நேற்று ஆலோசனை கேட்டது.
மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சுற்றுச்சூழல் ஆர்வலர்களான சென்னை கிறிஸ்தவ கல்லூரி தாவரவியல் துறை தலைவர் டி.நரசிம்மன், நிழல் அமைப்பைச் சேர்ந்த ஷோபா மேனன், கேர் எர்த் அமைப்பைச் சேர்ந்த ஜெய மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், கல்லூரி நிர்வாகங்கள் ஆகியவை கலந்துகொண்டன.
இந்த கூட்டத்தில் சென்னையில் பசுமை போர்வையை மீட்டெடுக்க என்ன செய்யலாம்? எப்படி செய்யலாம்? மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களுடன் சேர்ந்து எவ்வாறு செய்ய முடியும்? என்பன குறித்து மாநகராட்சி சார்பில் ஆலோசனைகள் கேட்கப்பட்டது.
உள்நாட்டு மரங்கள்
அப்போது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து கூறும்போது, சென்னையில் விழுந்த மரங்களில் பெரும்பாலானவை வெளிநாட்டு மர வகைகள். அதனால் உள்நாட்டு மரங்களான பூவரசு, புங்கன், ஆலமரம், வேம்பு, பனை மற்றும் உயிரினங்களுக்கு உணவளிக்கும் உள்நாட்டு பழ மர வகைகளை நட வேண்டும். அவற்றையும், அவரவர் விருப்பத்துக்கு நட விடாமல், அறிவியல் பூர்வமாக வரையறுக்கப்பட்ட முறையில் திட்டமிட்டு நட வேண்டும். அதற்கான வல்லுநர் குழு ஒன்றையும் ஏற்படுத்த வேண்டும். முறையாக பராமரிப்பது தொடர்பாக மாநகராட்சி பணியாளர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
கூட்டத்தில் பங்கேற்ற நிழல் அமைப்பைச் சேர்ந்த ஷோபா மேனன் கூறும்போது, ‘சென்னையில் பசுமை போர்வையை அதிகரிக்கவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல அமைப்புகள் தனித் தனியாக செயல்பட்டு வந்தன. அந்த அமைப்புகளை மாநகராட்சி நிர்வாகம் முதல்முறையாக ஒருங்கிணைத்திருப்பதும் அவர்களை அழைத்து ஆலோசனை கேட்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.