Published : 28 Dec 2022 04:50 AM
Last Updated : 28 Dec 2022 04:50 AM
வேலூர்: வேலூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளி சுவரில் விபத்து ஏற்படும் முன்பாக அங்கு வளர்ந்துள்ள மரத்தை பாதுகாப்பாக அகற்றி சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 41-வது வார்டு கஸ்பா பகுதியில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு, 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் பகுதியில் அரச மரம் வளர்ந்து அதன் வேர் பள்ளியின் சுற்றுச்சுவரை சேதமாக்கியுள்ளது. எந்த நேரத்திலும் சுற்றுச்சுவர் விழும் என்பதால் அரச மரத்தை முழுமையாக அகற்றி அந்த இடத்தில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பல்வேறு மட்டங்களில் புகார் தெரிவித்தும் பெரியளவில் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறப்படுகிறது. மேலும், அந்த இடத்துக்கு அருகிலேயே மாநகராட்சி குடிநீர் விநியோக சின்டெக்ஸ் தொட்டி உள்ளது. அருகில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் இங்குதான் தண்ணீர் பிடித்துச் செல்கின்றனர். சுவர் இடிந்து விழுந்து ஏதாவது அசம்பாவித சம்பவம் நடைபெறும் முன்பாக இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட விழிக்கண் மற்றும் கண்காணிப்பு குழுவின் உறுப்பினர் பாலா என்ற பாலு என்பவர் கூறும்போது, ‘‘இந்தப் பிரச்சினை பொதுமக்களின் உயிர் சார்ந்தது. இதில், மாநகராட்சி நிர்வாகம் அலட்சி யத்துடன் நடந்து கொள் கிறது. இப்போதெல்லாம் அடிக்கடி மழை பெய்து வருகிறது. எந்த நேரத்திலும் அசம்பாவித சம்பவம் நடைபெற வாய்ப்புள்ளதால் அந்த மரத்தை முழுமையாக அகற்றி சுற்றுச்சுவரை மீண்டும் கட்டிக் கொடுக்க வேண்டும். இதில், மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்’’ என்றார்.
இதுகுறித்து, வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமாரிடம் கேட்டதற்கு, ‘‘அந்த இடத்தை மாநகராட்சி உதவி பொறியாளர் நேரில் ஆய்வு செய்து வந்துள்ளார். மரத்தை பாதுகாப்பாக அகற்றி சுற்றுச்சுவர் கட்ட மாநகராட்சி பொறியாளரிடம் ஒப்புதல் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT