Published : 25 Dec 2016 10:55 AM
Last Updated : 25 Dec 2016 10:55 AM

சென்னை ஐசிஎப் ஆலையில் ஆண்டுதோறும் 500 எல்எச்பி பெட்டிகள் தயாரிக்க ரயில்வே வாரியம் அனுமதி: நவீன வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் கொண்டவை

சென்னை பெரம்பூர் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎப்) இனி ஆண்டுதோறும் அதிநவீன வசதிகள், கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட 500 ‘எல்எச்பி’ ரயில் பெட்டிகளைத் தயாரிக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த ‘லிங் ஹாப்மேன் புஷ்’ (LHB) நிறு வனத்தின் வடிவமைப்பில் இந்திய ரயில்வேயால் எல்எச்பி ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இவை எளிதில் தீப்பிடிக்காது, பெட்டி முழுவதும் ஸ்டீலால் வடிவமைக்கப்பட்டு சிவப்பு நிறத்தில் இருக்கும். ஒரு பெட்டி 51.7 டன் எடை கொண்டது. அதிர்வு இல்லாமல், பாதுகாப்பாக, வேக மாக செல்லக்கூடியது. சொகுசு இருக்கைகள், செல்போன் சார்ஜ் போடும் வசதி உட்பட பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன.

வழக்கமாகச் செல்லும் விரைவு ரயில் பெட்டியில் 72 படுக்கைகள், ஏசி பெட்டியில் 64 படுக்கைகள் இருக்கும். எல்எச்பி பெட்டிகளில் 80 படுக்கைகள், ஏசி பெட்டியில் 72 படுக்கைகள் இருக்கும். முக்கிய விரைவு ரயில்களின் பெட்டிகள் படிப்படியாக எல்எச்பி பெட்டிகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், இந்தூர் - பாட்னா விரைவு ரயில் கடந்த மாதம் 19-ம் தேதி கான்பூரில் திடீரென தடம்புரண்டு விபத்துக் குள்ளானதில் 130-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இது போன்ற விபத்துகளைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பழைய பெட்டி களை நீக்கவும், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த எல்எச்பி பெட்டிகளை அதிக அளவில் தயாரிக்கவும் ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பெரம்பூரில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎப்) அடுத்த ஆண்டு முதல் 500 எல்எச்பி பெட்டிகள் தயாரிக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

அதிகாரிகள் விளக்கம்

இதுதொடர்பாக ‘தி இந்து’விடம் ஐசிஎப் அதிகாரிகள் கூறியதாவது:

ஐசிஎப் தொழிற்சாலையில் சுற்றுலா ரயில்களுக்கான சொகுசு பெட்டி, ராணுவத்துக்கான ரயில் பெட்டி உட்பட 50 வகையான பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு உற்பத்தியாகும் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மொத்தம் 2,005 பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. இந்த ஆண்டில் 4,080 பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இங்கு சுமார் 200 எல்எச்பி பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. பாட்னா ரயில் விபத்துக்குப் பிறகு, எல்எச்பி பெட்டிகள் எண் ணிக்கையை அதிகரிக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. 2017-ம் ஆண்டு முதல் 500 எல்எச்பி பெட்டிகள் தயாரிக்க அனுமதி அளித்துள்ளது. இதற்கான உத்தரவு சில நாட்களுக்கு முன்பு வந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x