Published : 27 Dec 2022 04:10 AM
Last Updated : 27 Dec 2022 04:10 AM

பெண்ணுக்கு ரத்த நாள அறுவை சிகிச்சை: உதகை அரசு மருத்துவர்கள் சாதனை

பிரதிநிதித்துவப் படம்

உதகை: உதகையை அடுத்த எமரால்டு பகுதியை சேர்ந்தவர் சகுந்தியா (28). இவர், கடந்த 13-ம் தேதி விறகு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கவனக்குறைவால் இடது கையில் அரிவாளால் வெட்டிக்கொண்டார். அதீத ரத்தப் போக்கு ஏற்பட்டதால், உதகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், சகுந்தியாவுக்கு ஆழமான வெட்டு காயமும், தசைநார்கள் கிழிந்தும், கையில் செல்லும் முக்கிய ரத்தக் குழாய் முழுவதும் துண்டிக்கப்பட்டதும் தெரியவந்தது. இதனால் அவரது கையின் ஒரு பாதி உணர்ச்சி இல்லாமல், கை அசைவின்றியும் இருந்தது.

இதையடுத்து அறுவை சிகிச்சை நிபுணரும், அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவருமான கார்த்திகேயன் தலைமையில், மருத்துவர்கள் ராஜேஷ், அசோக் விக்னேஷ், சரண்யா ஆகியோர் அடங்கிய குழுவினர் சகுந்தியாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

3 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் கையில் அறுபட்ட ரத்தக்குழாய், சிரை குழாய் ஒட்டு மூலம் சீரமைக்கப்பட்டது. நரம்பு, தசை நார்களும் சரிசெய்யப்பட்டுள்ளன. தற்போது சகுந்தியா உடல்நலம் தேறி வருகிறார்.

இது குறித்து மருத்துவக் கல்லூரி டீன் மனோகரி கூறும்போது, ‘‘ரத்தக் குழாயில் செய்யப்படும் நுண் அறுவை சிகிச்சை பெங்களூரு, சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலுள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்படுவது வழக்கம். ரத்த நாளங்களில் செய்யப்படும் சிக்கலான அறுவை சிகிச்சையை, நீலகிரி மாவட்டத்தில் முதல்முறையாக அரசு மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்துள்ளனர்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x