Last Updated : 27 Dec, 2022 04:15 AM

 

Published : 27 Dec 2022 04:15 AM
Last Updated : 27 Dec 2022 04:15 AM

கோவை மாநகரில் அதிவேகமாக இயக்கி மக்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தும் பேருந்துகள்: போலீஸார் எச்சரிக்கை

கோவை: கோவையில் அதிவேகமாக இயக்கப்படும் பேருந்துகளால் விபத்து அபாயம் உள்ளதாகவும், இதை தடுக்க காவல்துறையினர், வட்டாரப் போக்கு வரத்துத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்அருகேயுள்ள நாகமங்கலத்திலிருந்து பெங்களூரு நோக்கி நேற்று சென்ற பேருந்து, கெலமங்கலம் அருகேயுள்ள வளைவு ஒன்றில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பெண் பயணி உயிரிழந்தார். 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

அதிவேகமாக பேருந்து இயக்கியதே இந்த விபத்துக்குகாரணம் என்று கூறப்படுகிறது.இந்நிகழ்வைப் போன்று, கோவையிலும் பேருந்துகள் அதிவேகத்தில் இயக்கப்படுவதாகவும், விபத்து அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கோவை மாநகரில் பிரதான சாலைகளில் 40 கிலோ மீட்டர் வேகத்திலும், வர்த்தகப் பகுதிகள் உள்ளசாலைகளில் 30 கிலோ மீட்டர் வேகத்திலும் வாகனங்கள் செல்ல வேக அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் இந்த வேக அளவை பின்பற்றுவதில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.

இதுதொடர்பாக ‘கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ்’ நுகர்வோர் அமைப்பின் செயலர் நா.லோகு கூறும்போது, ‘‘கோவையில் நகர, வெளியூர் மற்றும் ஆம்னி பேருந்துகள் என அனைத்தையும் சேர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான வாகனங்களில் சாலை விதிகள் சரிவர கடைபிடிப்பதில்லை. குறிப்பாக, நகர, வெளியூர் வழித்தட தனியார் பேருந்துகள் விதிமீறல்களில் முன்னணியில் உள்ளன.

நகரில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் செல்வதில்லை. சாலையில் செல்லும் பிற வாகனங்களை அச்சுறுத்தும் வகையில் பேருந்துகளை ஓட்டுகின்றனர். ஒரு நிறுத்தத்தில் பல நிமிடம் நிற்கின்றனர். அதை ஈடுகட்ட அடுத்த நிறுத்தத்துக்கு அசுர வேகத்தில் பேருந்துகளை இயக்குகின்றனர். தனியார் பேருந்துகளின் இந்த அதிவேகத்தால் விபத்து அபாயம் உள்ளது.

மேலும், தனியார் பேருந்துகளில் எழுப்பப்படும் ஏர்ஹாரன் ஒலி சாலைகளில் செல்பவர்களின் காதை கிழிக்கும் வகையில் உள்ளது. பொதுவாக, 80 முதல் 90 டெசிபல் வரையிலான ஒலியை காது தாங்கும். ஆனால், தனியார் பேருந்துகளில் ஏர் ஹாரன்கள் மூலம் 120 முதல் 130 டெசிபல் வரை தொடர்ந்து ஒலி எழுப்பப்படுவதாக தெரிகிறது. காவல்துறையினர், வட்டாரப் போக்குவரத்துத்துறையினர் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

இது தொடர்பாக மாநகர காவல்துறையின் போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன் கூறும்போது, ‘‘பேருந்து போக்குவரத்தின் மீது தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம். நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை மீறி அதிவேகமாக பேருந்துகளை ஓட்டினால் அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விதிமீறும் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

தவிர, அடிக்கடி குழு அமைத்து, வட்டாரப் போக்குவரத்துத் துறையினருடன் இணைந்து திடீர் சோதனை நடத்துகிறோம். அதில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் விதிமீறி பொருத்தப்பட்டிருந்தால் அவை பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. வாகனங்கள் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் செல்ல பொள்ளாச்சி சாலையில், மாநகர எல்லைக்குட்பட்ட சந்திப்புகளில் வேகத் தடுப்பான் ஜிக்ஜாக் வகையில் வைக்கப்பட்டு வாகனங்களின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது,’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x