Published : 27 Dec 2022 06:27 AM
Last Updated : 27 Dec 2022 06:27 AM
சென்னை: ஓபிஎஸ், அதிமுக பெயர், முத்திரை, தலைமை அலுவலக முகவரி ஆகியவற்றை பயன்படுத்த உச்ச நீதிமன்றமோ, உயர் நீதிமன்றமோ தடை விதிக்கவில்லை என்று பழனிசாமி தரப்புக்கு ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், கட்சி தலைமை நிர்வாகிகள்ஆலோசனைக் கூட்டம் கடந்த 21-ம் தேதி சென்னையில் நடைபெற்றது.
அக்கூட்டம் தொடர்பான அறிவிப்பில், பன்னீர்செல்வம் தன்னைஅதிமுக ஒருங்கிணைப்பாளர் என்றும், கட்சி தலைமை அறிவிப்பு என்றும் குறிப்பிட்டிருந்தார். கட்சி தலைமை அலுவலக முத்திரையும் அதில் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கட்சிக்கு தொடர்பில்லாதவர் அவ்வாறு பயன்படுத்துவது விதிமீறல். அதனால் அந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். பெறாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பழனிசாமி தரப்பிலிருந்து, பன்னீர்செல்வத்துக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
அதற்கு பன்னீர்செல்வத்தின்வழக்கறிஞர் நேற்று பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: பழனிசாமி அதிமுகவின் முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே. அதிமுக சார்பில் பேச அவருக்கு அதிகாரம் இல்லை. விதிகளை மீறி கூட்டப்பட்ட கட்சி பொதுக்குழு கூட்ட தீர்மானம் மூலம் தன்னை கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக கூறிக்கொள்கிறார்.
பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் செயல்பட்டு வருகிறார். அவர் 3 முறை முதல்வராகவும் இருந்துள்ளார். இவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதை இந்தியதேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டுள்ளது. அவர் தலைமைக் கழகம் பெயரில் வெளியிட்ட அறிவிப்பு சட்டப்படியானது. அதனால் பழனிசாமியின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது.
கட்சி அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்க கட்சி பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை.
கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அதிமுக பெயர், முத்திரை, அலுவலக முகவரி போன்றவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ தடை விதிக்கவில்லை. வழக்கறிஞர் நோட்டீஸில், பன்னீர்செல்வத்தை கட்சிக்கு தொடர்பில்லாதவர் என குறிப்பிட்டுள்ளார். பன்னீர்செல்வம் சட்டப்படி ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கட்சியின் பொருளாளராகவும், அடிப்படை உறுப்பினராகவும் உள்ளார்.
கட்சிக்கு தொடர்பில்லாத, விதிகளை மீறி கட்சியை கைப்பற்றியவர் தரப்பில்இருந்து நோட்டீஸ் அளிக்கப்ப ட்டுள்ளது. எனவே, கட்சி பெயர், முத்திரை, கட்சி அலுவலக முகவரியை பயன்படுத்தி வெளியிட்ட அறிவிப்பை பன்னீர்செல்வம் திரும்பப்பெற வேண்டிய அவசியம் இல்லை இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT