Published : 26 Dec 2022 04:05 AM
Last Updated : 26 Dec 2022 04:05 AM
உடுமலை: உடுமலை, தாராபுரம் சுற்று வட்டாரங்களில் சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் காய்கறி ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தக்காளி, வெங்காயம், பூசணி,வெண் பூசணி, வெண்டை, கத்தரி, புடலை, சுரைக்காய், பீர்க்கங்காய் என பலவகையான காய்கறி மற்றும் கீரைகள் அதிக அளவில் சாகுபடிசெய்யப்பட்டுள்ளன. உள்ளூர் சந்தைகளை நம்பியே இருக்க வேண்டிய நிலை உள்ளது. வசதிமிக்க மொத்த வியாபாரிகள் அவற்றைகொள்முதல் செய்து பெரு நகரசந்தைகளுக்கும், கேரளா உள்ளிட்டஅண்டை மாநில நுகர்வுக்காகவும் அனுப்பி வைக்கின்றனர்.
ஆனால், உள்ளூர் விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்படும் காய்கறிகள் கூட 6,7 மடங்கு கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படுவதை நேரடியாக காணும் விவசாயிகள் வேதனைக்குள்ளாகி வருகின்றனர். அதன்படி, தன்னிடம் கொள்முதல் செய்யப்பட்ட சுரைக்காய்க்கு கூடுதல் விலை வைத்துவிற்கப்பட்டதை கண்ட தாராபுரத்தை சேர்ந்த விவசாயி ஒருவர்,காய்கறி கடை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த விலை விவரத்தை புகைப்படம் எடுத்த சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, "துணி, நகை, கார், இருசக்கர வாகனம் என எதிலும் தான் உற்பத்தி செய்த பொருளுக்கு, அதன் உரிமையாளர் விலை நிர்ணயித்து விற்கிறார். ஆனால், விவசாயி என்ற நில உரிமையாளர் மட்டும் தான் விளைவித்த உணவு பொருளுக்கு தானே விலையை நிர்ணயிக்க முடியாத நிலை பல ஆண்டுகளாக தொடர்கிறது. ஆனால், எங்களிடமிருந்து காய்கறிகளை பெறும் வியாபாரிகள் மட்டுமே விலையை நிர்ணயம் செய்கின்றனர்.
உடுமலையிலுள்ள காய்கறிக் கடை ஒன்று, விவசாயிகளிடமிருந்து சுரைக்காய் கிலோ ரூ.5 என்ற விலையில் கொள்முதல் செய்தது. ஆனால், சில்லரை விலையாக அதே சுரைக்காய் கிலோ ரூ.32 என விற்பனை செய்கிறது. பிற காய்கறிகளுக்கும் இதே நிலைதான். விவசாயிகள் தொடர்ந்து மானியத்துக்காகவும், இலவசங்களுக்காகவும் அரசிடம்கையேந்த வேண்டிய நிலையிலேயே இருப்பது வேதனையாகவும், வேடிக்கையாகவும் உள்ளது.விளைபொருளுக்கான விலையை அரசு நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT