Published : 26 Dec 2022 05:55 AM
Last Updated : 26 Dec 2022 05:55 AM

குறுக்கு வழிகளில் இந்தி நுழைக்கப்படுகிறது: நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில், தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் கோபண்ணா எழுதிய ‘மாமனிதர் நேரு - அரிய புகைப்பட வரலாறு’ நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, ‘இந்து’ என்.ராம் பெற்றுக்கொண்டார். உடன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர். படம்: பு.க.பிரவீன்

சென்னை: குறுக்கு வழிகளில் இந்தி நுழைக்கப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவரும், ஊடகத் துறைத் தலைவருமான ஆ.கோபண்ணா எழுதிய ‘மாமனிதர் நேரு - அரிய புகைப்பட வரலாறு’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது.

தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். தொடர்ந்து, நூல் குறித்த திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கோபண்ணாவின் பேத்தி ஆதியா, முதல்வரிடம் நூலைக் கொடுத்தார். தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட, ‘இந்து’ என்.ராம் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

இந்த நூல் வரலாற்றின் கருவூலம். நேரு, காங்கிரஸ் கட்சியின் வரலாறு மட்டுமின்றி, இந்தியாவின் வரலாற்றையும் இது பிரதிபலிக்கிறது. கூட்டணியில் இருந்தாலும், இல்லை என்றாலும் திராவிட இயக்கத்தினருடன் நட்பு பேணக்கூடியவர் கோபண்ணா. இந்திய ஒன்றியத்துக்கு நேரு ஆற்றியப் பணிகளுக்கு நன்றி செலுத்தும் வகையில், அனைவரது இல்லங்களிலும் இந்தப் புத்தகம் இடம்பெற வேண்டும்.

உண்மையான ஜனநாயகவாதி: மகாத்மா காந்தியே வியக்கக் கூடியவராக இருந்தவர் நேரு. இந்திய மக்களின் குரலை எதிரொலித்தவர். ஒற்றை மொழி, மதம், இனம் என அனைத்துக்கும் எதிராக இருந்தவர்தான் நேரு.

வகுப்புவாதமும், தேசியவாதமும் சேர்ந்திருக்க முடியாது என்று கூறியதால்தான், நாம் அனைவரும் நேருவைப் போற்றுகிறோம். இந்தி பேச விரும்பாத மாநிலங்கள் மீது இந்தி திணிக்கப்படாது என்று உறுதியளித்தார் நேரு. ஆனால், தற்போது குறுக்கு வழிகளில் இந்தி திணிக்கப்படுகிறது.

உண்மையான ஜனநாயகவாதியான நேரு, 11 முறை தமிழகம் வந்துள்ளார். அவரால்தான் தமிழகத்தில் பல தொழிற்சாலைகள் அமைந்தன. தற்போது வரை தமிழகத்துக்கு எய்ம்ஸ் வராமல் இருப்பது, குறுக்கு வழிகளில் இந்தியைத் திணிப்பது, இவையெல்லம் நேருவின் மதிப்பை நமக்கு அடையாளம் காட்டுகின்றன.

நேருவும், காந்தியும் தேவை: தமிழகத்துக்கு தற்போது பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் தேவைப்படுவதுபோல, இந்தியாவுக்கு தற்போது நேருவும், காந்தியும் தேவைப்படுகிறார்கள்.

ராகுல் காந்தியின் பேச்சு, பூகம்பத்தை உருவாக்கி வருகிறது. அவரது பேச்சு, நேரு பேசுவதுபோல இருக்கிறது. கோட்சேவின் வாரிசுகளுக்கு, காந்தி, நேரு வாரிசுகளின் பேச்சைக் கேட்டால், கசக்கத்தான் செய்யும். அப்படிப்பட்ட நேருவின் சிந்தனைகளை உள்ளடக்கிய காலம் மீண்டும் இந்தியாவில் மலரட்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

விழாவுக்கு தலைமை வகித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும்போது, “கடந்த முறை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நான் கோபண்ணாவை வற்புறுத்தினேன். ஆனால் அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அவர் அந்தப் பொறுப்பை ஏற்றிருந்தால், இந்தப் புத்தகத்தை எழுதியிருக்க முடியாது. நேருவின் ஒவ்வொரு முயற்சியும் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டன. ரத்தம் சிந்தாமல், ஒரு நிலப்பரப்பை இன்னொரு நிலப்பரப்போடு இணைக்க முடியாது. ஆனால், ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல், காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த பெருமை நேருவுக்கே உரியது.

ஆனால், இந்த வரலாற்றை பாஜக மாற்றி எழுத முயற்சிக்கிறது. காங்கிரஸ் அல்லாத தலைவர் இந்தப் புத்தகத்தை வெளியிட வேண்டுமானால், அதற்கு ஏற்றவர் முதல்வர் ஸ்டாலின். பாஜக அரசை கொள்கைரீதியாக எதிர்கொள்வதில் தமிழக முதல்வர் முதன்மையாக இருக்கிறார்” என்றார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசும்போது, “நேருவுக்கும், படேலுக்கும் இடையே நெருடல் இருந்தது என்பது பொய். மொழிவாரி மாநிலம் உருவானதற்குக் காரணம் நேரு. இந்தப் புத்தகத்தில் முதல்வர் கூட்டம் தொடர்பான புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அதில் முன்வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் முதல்வர்கள், பின்வரிசையில் நிற்பவர்கள் மத்திய அமைச்சர்கள். இன்று இதுபோல புகைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்காதீர்கள்” என்றார்.

இந்த நிகழ்வை, நூலாசிரியர் கோபண்ணா தொகுத்து வழங்கினார். விழாவில், அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, க.பொன்முடி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், எம்.பி.க்கள் நவாஸ்கனி, விஜய் வசந்த், கே.சுப்பராயன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, முன்னாள் எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், புதுச்சேரி முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம், மூத்த பத்திரிகையாளர் மதுக்கூர் ராமலிங்கம் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x