Published : 26 Dec 2022 06:34 AM
Last Updated : 26 Dec 2022 06:34 AM
ஆவடி: ஆவடி அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்தில் சிக்கிய சிறுமி நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம் உயிழந்தோர் எண்ணிக்கை 2 ஆனது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே கோவில்பதாகையைச் சேர்ந்தவர் ரோஜா (64). இவது மகன் சங்கர்ராஜ், மருமகள் அனிதா, பேத்தி கீர்த்தி (11), பேரன் கவுதம் ஆகியோருடன் வசித்துவந்தார். கடந்த 19-ம் தேதி இரவு, உணவு தயாரிப்பதற்காக வீட்டில் உள்ள எரிவாயு அடுப்பை பற்ற வைத்தபோது, சிலிண்டர் வெடித்து சிதறி வீட்டினுள் தீப்பற்றியது.
இதில் ரோஜா, சங்கர்ராஜ், கீர்த்தி, கவுதம் ஆகியோர்மீது தீப்பற்றி படுகாயமடைந்தனர். அனிதா தனி அறையில் இருந்ததால், அவருக்குஎவ்வித காயமும் ஏற்படவில்லை. தொடர்ந்து, படுகாயமடைந்த ரோஜா உள்ளிட்ட 4 பேரும் ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றனர்.
தொடர்ந்து, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்ற நிலையில், கடந்த 20-ம் தேதி காலை ரோஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கவுதம் வீடு திரும்பினார்.
அதேநேரம் கீர்த்தியும், சங்கர்ராஜும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, சிறுமி கீர்த்தியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், உயிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்த ஆவடி டேங்க் பேக்டரி போலீஸார் இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கடந்த வாரம் எரிவாயு சிலிண்டரில் இருந்து காஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரெகுலேட்டர் மாற்றப்பட்டது. இருப்பினும் மீண்டும் காஸ் கசிவுஏற்பட்டு இந்த விபத்து நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT