Published : 26 Dec 2022 07:06 AM
Last Updated : 26 Dec 2022 07:06 AM
சென்னை: தமிழகத்தில் 90 சதவீதம் பேருக்குநோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதால், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கரோனா இறப்புகள் இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
இது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்றுகூறியதாவது: சீனா, ஹாங்காங், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட10-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனாதொற்று பரவலைத் தடுப்பது தொடர்பாக, சில தினங்களுக்கு முன் முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மருந்து, ஆக்சிஜன் கையிருப்பு போன்றவற்றைக் கேட்டறிந்த முதல்வர், கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.
அதேபோல, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யும் பணி, சென்னை, திருச்சி, மதுரை,கோவை ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்களில் தொடங்கிஉள்ளது.
சீனா, ஹாங்காங், ஜப்பான், தாய்லாந்து, தென்கொரியா ஆகிய5 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யுமாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன்படி, அந்த 5 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த 5 நாடுகளில் இருந்து நேரடியாக தமிழகம் வராமல், மாற்று விமானங்கள் மூலம் தமிழகம் வருவோருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்றவை கரோனா தடுப்பு விதிமுறைகளாகும். அவை இன்னும் விலக்கிக் கொள்ளப்படவில்லை.
தமிழகத்தில் தினமும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தினசரி தொற்று பாதிப்பு 10-க்கும் கீழ் பதிவாகி வருகிறது. கரோனா வைரஸ் மரபணு சோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் கரோனா தடுப்பூசி ஓர் இயக்கமாகவே செயல்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை 96 சதவீதம் பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 92 சதவீதம் பேரும் போட்டுக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் 90 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்புசக்தி அதிகரித்துள்ளது. அதனால்தான் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தமிழகத்தில் கரோனாஇறப்பு இல்லை.
தமிழகத்தில் கரோனா தொற்றுபரவலைத் தடுக்க அனைத்துநடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. எனவே, மக்கள் அச்சமடையத் தேவையில்லை. எனினும்,உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT