Published : 26 Dec 2022 06:00 AM
Last Updated : 26 Dec 2022 06:00 AM

ஆன்மிக கருத்துகளால் நிரம்பிய அரசியலமைப்பு: ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்

சென்னை: ஆன்மிகம், கலை, கலாச்சாரம் ஆகிய கருத்துகளால் நிரம்பியது நமது அரசியலமைப்பு என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

இந்திய நுண்கலைகள் குறித்த 3 நாள் சர்வதேச மாநாடு சென்னை ஐஐடியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாநாட்டை தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:

இந்தியாவின் எதிர்காலமாக திகழ்பவர்கள் இளைஞர்கள். அவர்கள் நம் நாட்டின் ஆன்மிகம், கலாச்சாரத்தின் சிறப்பை அறிந்து கொள்ள ஆசிரியர்கள் வழிசெய்ய வேண்டும். இந்தியாவின் கலாச்சாரம் வெவ்வேறாக இருந்தாலும் அனைத்துமே ஆன்மிகம் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைகின்றன. ஆன்மிகம், கலை, கலாச்சாரம் ஆகிய கருத்துகளால் நிரம்பியது நமது அரசியலமைப்பு.

நமது அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள மதச்சார்பின்மை (Secularism) எனும் சொல்லுக்கு தவறான புரிதல் உள்ளது. அந்த ஆங்கில வார்த்தைக்கான ஐரோப்பிய அர்த்தத்தையே இன்று வரை பின்பற்றி வருகிறோம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணித்தால், இந்த நாடே பூஜைகளாலும், மந்திரங்களாலும் நிரம்பி இருப்பதை உணர முடியும்.

மக்களுக்கான அடிப்படை உரிமைகளை எடுத்துரைக்கும் ராம ராஜ்ஜிய கருத்துகள்தான் அரசியலமைப்பில் அடங்கி யுள்ளன. அதை மக்கள் முழுவதுமாக தெரிந்து கொள்ளவில்லை. மாறாக, நமது மாணவர்களுக்கு ஆன்மிகம் இல்லாதஅரசியலமைப்பு கற்றுத் தரப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது.

இந்நிலை மாற வேண்டும். மேற்கத்திய நாடுகள் அடக்குமுறைகளாலும், வன்முறையாலும் உருவானவை. மாறாக, நமது பாரதம் பக்தியால் உருவானது. எது பாரதம் என்பதை கலைகள் மூலம் வெளிப்படுத்தி வருகிறோம். நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க அனைவரும் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், கர்னாடக இசைக்கலைஞர் டி.வி.கோபால கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x