

“வீடுகளை அழி, அவன் அடையாளம் இல்லாமல் போகட்டும். பள்ளிக்கூடங் களை அழி, அவன் பண்பாடு இல்லாமல் போகட்டும். நூலகங்களை அழி, அவன் வரலாறே இல்லாமல் போகட்டும்!” என்று நூலகங்களின் பராமரிப்பின்மைக் குறித்து கோபமாக சொல்வார் பத்திரிகையாளர் சமஸ். தமிழகத்தின் பெரும்பான்மை கிராமப் பஞ்சாயத்துகளின் நூலகங் களைப் பார்த்தபோது நமக்கு வர லாறே இல்லாமல் போய்விடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டது. பல நூலகங்களில் ஓட்டை, உடைசல் களை அடுக்கியிருக்கிறார்கள். பல நூலகங்களில் பாம்புகள் குடியிரு கின்றன. பல நூலகங்களில் புத்தகம் வைக்க வசதியே இல்லை. பல நூலகங்களில் புத்தகங்கள் இல்லை. பல இடங்களில் நூலகமே இல்லை. கிராமப்புற நூலகங்கள் எப்படி இருக்க வேண்டும்? ஏன் இருக்க வேண்டும் என்பது குறித்த ஆய்வு களை செய்துவரும் சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாக வியல் இணைப் பேராசிரியர் முனைவர் இரா.சீனிவாசன், இது குறித்த கருத்து களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்:
“சமீபத்தில் சிறந்த நூலகர் களுக்கான விருது வழங்கும் விழாவில் பேசிய தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர், ‘படைப்பாற்றலை புறந்தள்ளிவிட்டு வெறும் கல்வியைக் கற்பதில் பலனில்லை’ என்றார். அடிப்படையில் மனிதவள மேம் பாட்டில் ஆழ்ந்த புரிதலும் அனுபவ மும் உள்ளவர் அவர். அதனால் போகிறபோக்கில் கூறிய வார்தை களாக இதை ஒதுக்கமுடியாது. தமிழகத்தில் சில நல்ல திட்டங்கள் காழ்ப்புணர்ச்சி அரசியலையும் தாண்டி மக்களின் மனதில் ஆழப் பதிந்துவிடும். மழைநீர் சேகரிப்புத் திட்டம், உழவர் சந்தை இதற்கு உதாரணங்கள். இந்த வரிசையில் பஞ்சாயத்துகள்தோறும் தொடங்கப் பட்ட நூலகங்கள் வந்திருக்க வேண்டும். ஆனால், வரவில்லை.
கடந்த 11-வது திட்ட காலத்தில் பெரும் பொருள் செல வில் கிராமங்கள்தோறும் நூலகங் கள் உருவாக்கப்பட்டன. தமிழகத்தில் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்து நூல கத்துக்கும் தலா ரூ. ஒரு லட்சத்துக்கு புத்தகங்கள் மற்றும் அறைகலன்கள் வாங்கிக்கொடுக்கப்பட்டன. படைப் பாற்றல், திறனறிதல், தன்னம்பிக்கை வளர்ப்பு, தகவல் பரிமாற்றம், உலக நிகழ்வுகள், ஆங்கிலப் பயிற்சி, உயர்க் கல்வி, வேலைவாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு வளர்ப்பது ஆகியவை நூலகங்களின் நோக்கம். நமது நாட்டின் மிகப் பெரிய மனித வளம் குழந்தைகளே. அதனா லேயே அப்துல்கலாம், அவர்களைத் தேடிச் சென்றார். இன்று எத்த னையோ கிராமங்களில் நம்பிக்கை அளிக்கும் குழந்தைகள் இருக்கி றார்கள். பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் போல எத்த னையோ ‘வைரங்கள்’ கிராமங் களில் மறைந்திருக்கின்றன. இவர் களுக்கு எல்லாம் கிடைக்கப் பெற்ற அலாவுதீனின் அற்புத விளக்குகள் தான் கிராமத்து நூலகங்கள்.
ஆனால், இன்று பெரும்பாலான கிராம பஞ்சாயத்து நூலகங்கள் பாழடைந்திருக்கின்றன. சமூக விரோதிகளால் அவை சூறையாடப் பட்டிருக்கின்றன. சில இடங்களில் அவை ஆரம்பப் பள்ளிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கெல்லாம் காரணம் யார்? அரசாங்கமா? இல்லை, என்னைக் கேட்டால் நான் மக்களைதான் சொல் வேன். பல கிராமப் பஞ்சாயத்துகளில் ‘நிதியில்லை’ என்று சொல்கிறார்கள். அதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. உள்ளாட்சி என்பதே கிராம சுயாட்சிதானே!
எல்லாவற்றுக்கும் அரசை எதிர் பார்க்கக் கூடாது என்றுதானே கிராமப் பஞ்சாயத்துக்கு சுயாட்சி அதிகாரம் கொடுத்தார்கள். நூலகத்துக்கு எவ் வளவு செலவாகிவிடப் போகிறது? உண்மையில் பொது மக்களுக்கு புத்தகங்கள் மீதும், வாசிப்பின் மீதும், தமது எதிர்கால சந்ததியினர் மீதும் அக்கறை இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. ஆகவே, இது அரசின் தோல்வி அல்ல. கிராம மக்களின் தோல்வியே.
எனவே, கிராமப் பஞ்சாயத்துக்கள் மக்களுடன் இணைந்து நூலகங்களில் பராமரிப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். தேசிய அறிவுசார் ஆணையமும் இதைத்தான் வலியுறுத்துகிறது. கிராமங்களுக்கு இணைப்பு சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நூலகங்கள். நூலகங்களே கிராமங்களின் அறிவு சார்ந்த உள்கட்டமைப்பு அம்சங் கள். வாசித்தல் என்பதும் ஒரு வித்தியாசமான யோக முறையே!
அது மனிதனின் பல்வேறு அகக் கதவுகளைத் திறக்கும். மக்களும் தெருக்களை மறித்து சாதிக்கொரு கோயில்களைக் கட்டும் பிரிவினை போக்கை கைவிட்டு, நூலகங்களை பராமரிக்க வேண்டும்.
தமிழகத்தின் 98 சதவிகிதம் பள்ளிக ளில் நூலகங்கள் இருக்கின்றன. ஆனால், அதில் 24 சதவிகிதம் நூல கங்களில்தான் முழு நேர நூலகர்கள் இருக்கின்றனர். கேரளத்தில் கிராம நூலகங்கள் அனைத்தும் உலகத் தரத்தில் இருக்கின்றன. அவை இணையதள வசதிகளுடன் மின் மயமாக்கப்பட்டுள்ளன. பஞ்சாயத்து மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கிராமங்களில் தொண்டு நிறுவனங்கள், மாணவர்கள், பெற்றோர்கள், இளை ஞர்களை ஒருங்கிணைத்து நூலகங் களை மீட்க வேண்டும். உறுப்பினர் சேர்க்கைக்காக சிறுதொகை வசூலித்தும் நன்கொடை பெற்றும் நூலகங்களைப் புனரமைக்க வேண்டும். வீடுகளுக்கே சென்று புத்தகங்களை விநியோகிக்கலாம். வீட்டில் படிக்கும் சூழல் மற்றும் இட வசதி இல்லாதவர்கள், போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்பவர்கள், அஞ்சல் வழி படிப்போர் ஆகியோருக்கு உதவும் இடமாக நூலகங்கள் திகழ வேண்டும். இங்கே பணிபுரியும் நூலகர் புத்தகங்களைப் பராமரிப்பவராக மட்டும் இருக்கக் கூடாது. குழந்தை களின் சந்தேகங்களைப் போக்கும் ஆசிரியராகவும் இருக்க வேண்டும்.
நூலகர் தவிர, கிராமத்தின் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், இளை ஞர்கள், இல்லத்தரசிகள் என பலரது பங்களிப்புடன் நூலகத்தில் இணையதள வசதிகளையும் ஏற்படுத்தலாம். இதன் மூலம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இலவசமாக வழங்கும் மின்கற்றல் சேவைகளைப் பெற முடியும். வரும் காலத்தில் மின்கற்றல் மூலம் கல்வி என்பது உயர்க் கல்வியின் தவிர்க்க முடியாத உச்சத்தை எட்டும்போது இந்த நூலகங்கள் கிராம மக்களின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கும்” என்கிறார்.
அரசுப் பள்ளி மாணவி செம்பருத்தியை உங்களுக்கு தெரியுமா?
சரி, கிராமப் பஞ்சாயத்துக்களில் நல்ல நூலகங்களே இல்லையா? முன்னுதாரண கிராமங்களில் நூல கங்கள் ஓரளவு நல்ல நிலையில் செயல்படுகின்றன. திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூரில் அருமையாக செயல்படுகிறது அது. உடுமலைப் பேட்டை ஒன்றியத்தின் ஜல்லிப்பட்டி கிராமப் பஞ்சாயத்தின் கிளை நூலகர் லட்சுமணசாமி அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட முன்னுதாரண நூல கராக திகழ்கிறார். கடந்த 1955-ல் தொடங்கப்பட்டது இந்த நூலகம். 1956-ம் ஆண்டு ஜூன் 13 அன்று இந்த நூலகத்துக்கு வந்த அன்றைய முதல்வர் காமராஜர், ‘இந்த நூலகம் நல்ல முறையில் நடந்துவருவதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன்’ என்று கைப்பட பாராட்டு குறிப்புரை எழுதினார். அதை பொக்கிஷம் போல பாதுகாத்து வரும் லட்சுமணசாமி, வாரம்தோறும் நூலகத்தில் குழந்தை களுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி, நூலக வாசகர் வட்ட திட்டம் உள்ளிட்ட வற்றை செயல்படுத்தி வருகிறார்.
நூலகத்தைத் திறந்து வைக்கும் செம்பருத்தி
“எங்க கிராமத்து குழந்தை கள் ஒவ்வொருவரையும் எங்கள் நூலகத்தின் உறுப்பினராக்கி யிருக்கோம். ஒவ்வொரு குழந்தையும் குறைந்தது 100 புத்தகங்களையாவது வாசிக்க வைக்க வேண்டும் என்பது லட்சியம். அதை நோக்கி செயல் பட்டுவருகிறது எங்கள் நூலகம்” என்கிறார்.
கிராம நூலகம் தொடர்பான இன்னொரு நெகிழ வைக்கும் நிகழ்வு கடந்த ஆண்டு நடந்தது. கடந்த ஆட்சியில் குன்னம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தவர் எஸ்.எஸ்.சிவசங்கர். ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றுக்காக குன்னத்துக்கு அவர் சென்றிருந்தார். அரசுப் பள்ளி நிகழ்ச்சியில் படிப்பின் முக்கியத்துவம் குறித்து அவர் பேசிக் கொண்டிருக்கும்போது துணிச்சலாக எழுந்த 8-ம் வகுப்பு மாணவி செம்பருத்தி, ‘எங்க கிராமத்துல நூலகமே இல்லை, அப்புறம் எங்கே சார் போய் படிக்குறது. முதல்ல நூலகத் துக்கு ஏற்பாடு பண்ணுங்க சார்’ என்று கோரிக்கை விடுத்தார். உடனடியாக நூலகத்துக்கு நிதி ஒதுக்கி, நூலகக் கட்டிடத்தையும் கட்டிக்கொடுத்தார் சிவசங்கர். அந்த நூலகக் கட்டிட திறப்பு விழாவுக்கு மாணவி செம்பருத்தியையே சிறப்பு விருந்தினராக்கி அவர் கையாலேயே நூலகம் திறக்கப்பட்டது. நூலகக் கல்வெட்டிலும் செம்பருத்தியின் பெயர் பதிக்கப்பட்டது. இன்று அந்த நூலகத்தை மக்களே சிறப்பாக பராமரிக்கிறார்கள். ஒரு மாணவியின் துணிச்சலும் தன்னம்பிக்கையும் கொடுத்த வெற்றி அது!
- நாளையுடன் நிறைவு...