Published : 25 Dec 2022 08:08 AM
Last Updated : 25 Dec 2022 08:08 AM

மின்வாரியம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்

கோவை: மின்வாரியம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தென்னிந்திய பட்டய கணக்காளர்கள் சங்கத்தின் கோவை கிளை சார்பில் கோவையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை ரூ.5, டீசல் விலை ரூ.4-ஐ குறைப்போம் என்றனர். ஆனால், சொன்னதை செய்யவில்லை. சொன்னதை செய்யுங்கள் என்றுதான் நாங்கள் வலியுறுத்துகிறோம். பொய் சொல்வதில் போட்டி வைத்தால் திமுக அமைச்சர்கள் அனைவரும் முதலிடம் பிடிப்பார்கள். மத்திய அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தச் சொல்லவில்லை. காற்றாலை, சூரிய மின்சக்தியில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது. ஆனால், நிலக்கரியை இறக்குமதி செய்யும்போது கமிஷன் பெறுவதற்கும், தனியார் நிறுவனங்களை ஆதரிப்பதற்கும் மட்டும்தான் மின்கட்டண உயர்வு பயன்படுகிறது. சாமானிய மக்களுக்கு மின்கட்டண உயர்வு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் காற்றாலைக்கு ஒரு மெகாவாட்டுக்கு ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்கின்றனர். பெயர் மாற்றம் செய்ய ரூ.10 லட்சம் லஞ்சமாக கேட்கின்றனர். இப்படி இருந்தால் எந்த தொழிலதிபர் காற்றாலையை நிறுவுவார். ஏற்றுமதி மதிப்பு என்ன, மின்வாரியம் எவ்வளவு நஷ்டத்தில் உள்ளது, எவ்வளவு வட்டி கட்டுகிறார்கள், நஷ்டத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அதை பார்த்து மக்கள் தெரிந்துகொள்வார்கள்.

ராகுல்காந்தி நடைபயணம் என்பது மக்களுக்கு ஒரு வேடிக்கை. இந்தியாவை பிரிக்கக்கூடியவர்களை உடன் வைத்துக்கொண்டு ராகுல் நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடைபயணம் ராகுல் காந்திக்கு நல்ல உடற்பயிற்சி. மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. பனைவெல்லத்தை பொங்கல் பரிசுத் தொகுப்போடு அளிப்பதாக தெரிவிக்கவில்லை. கரும்பும் அளிக்கவில்லை. இது பொங்கல் தொகுப்பு இல்லை. பொய் தொகுப்பு. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x