

எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் ஜெயலலிதாவுக்கு ரூ.15 கோடியில் நினைவு மண்டபம் கட்டப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும், நாடாளுமன்ற வளாகத்தில் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்க வேண்டும் என மத்திய அரசிடம் பரிந்துரைக்கவும், எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் பெயரை மாற்றவும் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானார். அதைத் தொடர்ந்து அன்று நள்ளிரவில் முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும், 31 அமைச்சர்களும் பதவியேற்றனர். 6-ம் தேதி ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த 3 நாட்களாக முதல்வர், அமைச்சர்கள் போயஸ் கார்டனில் சசிகலாவுடன் ஆலோ சனை நடத்தினர். ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத் துக்கு நேற்று முன்தினம் முதல்வர், அமைச்சர்களுடன் வந்து சசிகலா அஞ்சலி செலுத் தினார்.
இந்நிலையில், புதிய அமைச் சரவையின் முதல் கூட்டம் தலை மைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் போயஸ் கார்டன் சென்றனர். அங்கு ஜெயலலிதாவின் படத்துக்கு அஞ்சலி செலுத்திய அவர்கள், சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினர்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்ட அவர்கள், 11.12 மணிக்கு ஜெயல லிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தினர். 11.26 மணிக்கு அனைவரும் தலைமைச் செயலகம் வந்தனர். 11.30 மணிக்கு புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் தொடங்கியது.
அமைச்சரவைக் கூட்ட அரங்கில் அலங்கரித்து வைக்கப் பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்துக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், அமைச்சர்களும் மலர்தூவி மரியாதை செய்தனர். பின்னர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
முதல்வரும் அமைச்சர்களும் தங்களது அலுவலக அறைகளுக்குச் சென்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டனர். பின்னர் பகல் 1.10 மணிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மீண்டும் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக மக்களால் ‘அம்மா’ என அன்புடன் அழைக்கப்பட்ட ஜெயலலிதா, எதிர்பாராதவிதமாக கடந்த 5-ம் தேதி காலமானார். இதுகுறித்து தமிழக அமைச்சரவை அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது. ஜெயலலிதாவைப் பிரிந்து வாடும் லட்சோப லட்சம் அதிமுக தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் தமிழக அமைச்சரவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. ‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என தனி மனித ராணுவமாக வாழ்ந்து மறைந்த ஜெயலலிதா காட்டிய வழியில் அயராது உழைப்போம் என உளமார சத்தியம் செய்கிறோம்.
ஜெயலலிதாவின் உருவப் படத்தை சட்டப்பேரவையில் வைக்கவும், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ரூ.15 கோடியில் நினைவு மண்டபம் கட்டவும், ‘பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் நினைவிடம்’ என்பதை ‘பாரத ரத்னா டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா செல்வி ஜெ.ஜெயலலிதா நினைவிடம்’ என பெயர் மாற்றம் செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண் டும், நாடாளுமன்ற வளாகத்தில் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இது தவிர, சட்டப்பேரவை யில் விதி 110-ன் கீழ் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை நிறை வேற்றுவது, சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்துக்கு (ஜிஎஸ்டி) ஆதரவு அளிப்பது, காவிரி பிரச்சி னையில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நடத்துவது என பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 5-ம் தேதி நள்ளிரவில் முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சர் களும் முதல்முறையாக நேற்று தலைமைச் செயலகம் வந்தனர். காலை 11.26 மணிக்கு தலைமைச் செயலகத்துக்கு வந்த முதல்வரை தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ், முதல்வரின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து ஆலோசனை
அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும் பிற்பகல் 2.50 மணிக்கு அனைத்து அமைச்சர்களும் புறப்பட்டுச் சென்றனர். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் மட்டும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கடந்த 2014-ல் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பதவி இழந்ததும் முதல்வரான ஓ.பன்னீர் செல்வம், தனது நிதியமைச்சர் அலுவலக அறையிலேயே பணிகளை மேற்கொண் டார். தற்போது நிதியமைச்சர் அலுவலக அறையே முதல்வர் அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.