Last Updated : 10 Dec, 2016 11:54 AM

 

Published : 10 Dec 2016 11:54 AM
Last Updated : 10 Dec 2016 11:54 AM

நொய்யல் இன்று 2: உடைப்பெடுத்த குளத்தில் உருவான எம்.ஜி.ஆர். மதகு

பொங்கி அழித்த காட்டாற்றின் பயணம்...

கடலூர், சென்னையில் 2015 நவம்பரில் புயல், மழை, வெள்ளத்தால் பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டனர். அதேபோல 1978-1979-ம் ஆண்டுகளில் புயல், மழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் கோவை மண்டலமும் தப்பவில்லை. நொய்யல் பொங்கிப் பிரவாகமெடுத்திருந்தது. இந்த நதி சார்ந்த 100-க்கும் மேற்பட்ட நீரோடைகள், ஆறுகள்போல மாறின. அணைகள், தடுப்புச் சுவர்கள், வாய்க்கால் மதகுகள் தெரியாத அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்தது. ஏறத்தாழ 32 குளங்களின் மதகுகள் உடைந்து, பல குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது.

கோவை நகருக்கு 2 கிலோமீட்டர் மேற்கே உள்ள செல்வசிந்தாமணி குளம் கரை உடைந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, செட்டிவீதி, சுண்டக்காமுத்தூர் பிரிவு பகுதிகளில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.

அதேபோல நகருக்கு 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிங்காநல்லூர் குளத்தில் உடைப்பெடுத்து, உபரி நீர் ஒண்டிப்புதூர் ரயில்வே பள்ளம், ஆணைவாரி பள்ளம் வழியாக பெருக்கெடுத்தது.

நீரில் மூழ்கிய தரைப்பாலம்

இந்த பள்ளத்திலிருந்து தென்கிழக்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் நொய்யல் ஆறு செல்கிறது.

இதன் குறுக்கே இருந்த ஒட்டர்பாளையம் தரைப்பாலம் தண்ணீரால் 10 மீட்டர் உயரத்துக்கு மூழ்கிவிட்டது. சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு இரு கரைகளையும் மூழ்கடித்து ஓடியது ஆற்று வெள்ளம்.

இதனால் ஆற்றின் தென்புறக்கரையில் உள்ள ஒட்டர்பாளையம், பட்டணம், பீடம்பள்ளி கிராமங்கள் நகரப் பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டன. அந்த கிராம மக்கள் 15 கிலோமீட்டர் சுற்றுவழிப் பாதையில் நகருக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டது. 100 மீட்டர் அகலத்துக்கு பாய்ந்தோடிய வெள்ளம், ஒண்டிப்புதூர் ரயில்வே பள்ளம், ஆணைவாரிப் பள்ளங்களுடன் இணைந்து விட்டதுபோல் தோற்றம் கொண்டது.

இடைப்பட்ட நிலப் பரப்பில் நெசவாளர் காலனி, காமாட்சிபுரம், ஸ்டேன்ஸ் காலனியில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டன.

திருச்சி சாலையில் அமைந்துள்ள கஸ்தூரி மில்ஸ், கம்போடியா மில்ஸ், ஸ்ரீஹரி மில்ஸ் போன்ற பெரிய நூற்பாலைகள், வேஸ்ட் காட்டன் மில்ஸ் எனப்படும் சிறு ஆலைகள் வெள்ளத்தில் சிக்கின. வெள்ளம் சூழ்ந்த வீடுகள், நூற்லைகளின் வாயிலில் மணல் மூட்டைகளை அடுக்கினர்.

அவதிக்குள்ளான மக்கள்

சுற்றுப்புறத்தில் கரும்பு, தென்னை, சோளம் பயிரிடப்பட்டிருந்த தோட்டங்களிலும் குளம்போல தண்ணீர் தேங்கியது. இப்பகுதிகளில் மக்களின் உடமைகள் பெரும் சேதத்துக்குள்ளாகின.

கடந்த ஆண்டு சென்னை நகரில் கழுத்து அளவு தண்ணீரில் மக்கள் சென்றதுபோல, செட்டி வீதி, ஸ்டேன்ஸ் காலனி, காமாட்சிபுரம், நெசவாளர் காலனி பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் அவதிப்பட்டனர். மக்களின் தவிப்பை பத்திரிகைகள், புகைப்படங்களுடன் வெளியிட்டன.

அதைப் பார்த்த, அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்தார். வேஷ்டியை மடித்துக்கட்டிக் கொண்டு வெள்ளத்தில் இறங்கிய அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிட்டார்.

அப்போது எம்ஜிஆருடன் இருந்தவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் கூறியது: கோவையில் வெள்ளம் வந்தபோது, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்த எம்.ஜி.ஆரிடம், செட்டிவீதி, செல்வபுரம், சுண்டக்காமுத்தூர் பகுதிகளில் வெள்ளம் புகுந்து விட்டதை தெரிவித்தேன்.

வெள்ள நீரில் நடந்துசென்ற எம்.ஜி.ஆர்.

உடனே அவர் காரிலேயே என்னையும் அழைத்துக்கொண்டு வந்தார். குடியிருப்புகளில் தேங்கி நின்ற தண்ணீருக்குள் வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நடந்தபோது, ஓரிடத்தில் எம்.ஜி.ஆருக்கு முள்குத்திவிட்டது. மக்களின் துயரத்தையும்,, வெள்ளத்தில் தத்தளித்த குடியிருப்புகளையும் பார்த்த எம்ஜிஆர் உணர்ச்சிவசப்பட்டு, செருப்பை காரிலேயே விட்டுவிட்டு வந்திருந்தது அப்போதுதான் தெரிந்தது.

எனது செருப்பை அவரை அணியும்படி கேட்டுக்கொண்டேன். “நீ என்ன செய்வே?“ என்று எம்ஜிஆர் கேட்க, “நான் சமாளிச்சுக்குவேன்” என்று கூறினேன். அன்று என் செருப்பை அணிந்து கொண்டுதான் எம்.ஜி.ஆர். தண்ணீருக்குள் நடந்தார் என்பது என்றும் என்னால் மறக்க முடியாதது.

அப்போது செல்வ சிந்தாமணி குளத்தின் கரையும், ஒரு பக்க மதகும் உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளம், பக்கத்தில் இருந்த பிரதான தார் சாலையை மூழ்கடித்து, அடுத்ததாக இருந்த செட்டி வீதி மற்றும் சுண்டக்காமுத்தூர் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்திருந்தது.

கரை உடைந்த பகுதியில் ஒரு மதகு கட்டி, அதில் திறக்கப்படும் நீர் அங்கிருந்த வாய்க்கால் மூலம் உக்கடம் பெரியகுளத்துக்கு செல்லவேண்டும். அங்கேயே பாலம் கட்டித் தடுப்புச் சுவர் ஏற்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு எம்ஜிஆர் உத்தரவு பிறப்பித்தார். அதன் பின்னர் புதிய மதகும், தடுப்புச் சுவரும் அமைக்கப்பட்டது. தற்போதும் அந்த மதகை எம்.ஜி.ஆர். மதகு என்றே மக்கள் அழைக்கிறார்கள்.

நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுப்பது அப்போதெல்லாம் அடிக்கடி நிகழும். கோடையின்போது மட்டும் சில மாதங்கள் வறண்டு காணப்படும்.

ஆனால், இப்போதெல்லாம் மழைக் காலங்களில்கூட நொய்யலில் தண்ணீர் பெருக்கெடுப்பது இல்லை. நொய்யல் உருவாகும் இடத்திலேயே நிறைய பேர் பம்ப்செட் அமைத்து தண்ணீர் உறிஞ்சுவதுதான் அதற்கு முக்கியக் காரணம்.

ஆற்றின் கரையிலேயே ஆழ்குழாய்க் கிணறு அமைத்து தண்ணீர் எடுக்கிறார்கள். மினரல் வாட்டர் கம்பெனிகளும் இதில் அடக்கம்.

நகரமயமாக்கம் அதிகரிக்கும்போது, அணைகள், குளங்கள், வாய்க்கால்களில் சாக்கடை நீர் மட்டுமே கலக்கும். மங்கலம், திருப்பூர் தாண்டி கழிவுநீர் செல்லும்போது நிலைமை இன்னும் மோசமாகும்.

எனவே, பேரூருக்கு மேற்கே தொண்டாமுத்தூர், மாதம்பட்டி அருகே ஒரு பெரிய அணை கட்டினால், அதிலிருந்து திருப்பூர் வரை நீரைக் கொண்டுசெல்ல முடியும் என்று அப்போதே நான் வலியுறுத்தினேன். அந்தக் கருத்து ஏற்கப்படவில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x