

திரைப்படங்களை திரையிடுவதற்கு முன்பு தேசியகீதம் இசைப்பது தமிழக திரையரங்குகளில் நேற்று நடைமுறைக்கு வந்தது.
திரையரங்குகளில் படத்தை திரையிடுவதற்கு முன் தேசிய கீதத்தை கட்டாயமாக இசைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து திரையரங்குகளில் தேசியகீதம் இசைப்பது பல இடங்களில் அமலுக்கு வந்துள்ளது.
இது குறித்து சென்னை தேவி திரையரங்கின் மேலாளர் சங்கர் ‘தி இந்து’ விடம் கூறும்போது, “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை இன்று (நேற்று) முதலே பின்பற்றத் தொடங்கிவிட்டோம். அரசாங்க ஆணைப்படி கொடுக்கப்பட்டுள்ள 1.13 நிமிட தேசியகீதம் திரைப் படம் தொடங்குவதற்கு முன் இசைக்கப்படுகிறது. மக்கள் அனைவரும் எழுந்து நின்று தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்துவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை நாடு முழுவதும் அமலுக்கு கொண்டு வந்தது வரவேற்கத்தக்க விஷயம்!’’ என்றார்.
தற்போது நடைமுறைக்கு வந்துள்ள இந்த திட்டத்தை சென்னை ஏவி.எம் திரையரங்கம் கடந்த 15 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது. இதுகுறித்து ஏவி.எம் திரையரங்க நிர்வாகம் தரப்பில் கூறும்போது, ‘‘ஏவி.எம் குமரன் அவரது மகன் சண்முகம் ஆகியோர் தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்றபோது அங்குள்ள திரையரங்குகளில் அந்த நாட்டின் தேசியகீதம் இசைக்கப்படுவதை பார்த்துள்ளனர்.
இதையடுத்து நம் ஊரிலும் இதை அமல்படுத்த வேண்டும் என்று விரும்பி அப்போது முதலே செயல்படுத்தி வருகின்றனர்” என்றனர்.
திரையரங்குகளில் படத்தை திரையிடுவதற்கு முன் தேசியகீதத்தை கட்டாயமாக இசைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.