

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவ லர்கள் (வி.ஏ.ஓ.) சங்கத்தினரின் போராட்டத்தை சட்ட விரோத மானது என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக சேலம் மாவட்டம் அல்லிக்குட்டையைச் சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியுள்ளதாவது:
சேலம் தாலுகா அலுவலகத் தில் கடந்த ஜூன் 18-ம் தேதி ஜமாபந்தி நடந்துள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியரும் அதில் கலந்து கொண்டார். அப்போது கடமையைச் சரிவர செய்யவில்லை எனக் கூறி 2 வி.ஏ.ஓ.க்களை மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்தார்.
ஆட்சியரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் மறுநாள் 19-ம் தேதியிலிருந்து சேலம் மாவட்டத்தில் வேலை நிறுத்தம் தொடங்கினர். வேலைநிறுத்தம் தொடர்பாக சட்டப்படி அளிக்க வேண்டிய நோட்டீஸை முன்கூட்டியே அளிக்காமலேயே இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் அளிக்கும் பணி உள்பட வருவாய்த் துறையில் பல மிக முக்கியமானப் பணிகளை வி.ஏ.ஓ.க்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் வி.ஏ.ஓ.க்கள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக சேலம் மற்றும் அருகிலுள்ள மாவட்டத்தில் பணிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாநில அளவிலான வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தவும் அந்த சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
தங்களது பிரச்சினைக்கு விதிமுறைகளின்படி சட்ட ரீதியாக தீர்வு காண்பதற்கு பதிலாக, வி.ஏ.ஓ.க்கள் இவ்வாறு போராட்டம் நடத்துவது சரியல்ல. ஆகவே, வி.ஏ.ஓ.க்களின் போராட்டம் சட்ட விரோதமானது என நீதிமன்றம் அறிவிப்பதுடன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வி.ஏ.ஓ.க்களை உடனடியாகப் பணிக்கு திரும்புமாறு உத்தரவிட வேண்டும் என்று ராதாகிருஷ்ணன் கோரியுள்ளார்.
இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக அரசுத் தரப்பில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வார காலத்துக்கு ஒத்தி வைத்தனர்.