இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் போலீஸார் மீது கடும் நடவடிக்கை: சைலேந்திர பாபு எச்சரிக்கை
சென்னை: ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்லும் போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்போர், ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதன்காரணமாக, ஹெல்மெட் அணிவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், பொதுமக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய போலீஸாரில் பலர் ஹெல்மெட் அணிவது இல்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும் போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் அடையாளத்தை காரணமாக கூறி வாக்குவாதம் செய்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை பாயும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். இது தொடர்பாக டிஜிபி வெளியிட்ட உத்தரவு:
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்லும் போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பணிக்கு வரும்போலீஸாரின் வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும். ஹெல்மெட் வாங்கி வந்து காண்பித்த பிறகுதான் வாகனத்தை ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். வாகன சோதனையில் ஈடுபடும், போக்குவரத்து மற்றும் சட்டம் - ஒழுங்கு போலீஸாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.
