

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி, பகல் பத்து உற்சவம் நேற்று தொடங்கியது. இதில் சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் பகல் பத்து உற்சவம் நேற்று தொடங்கியது.
இதையொட்டி, நேற்று அதிகாலை 5.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, காலை 6.30 மணிக்கு அர்ச்சுன (பகல் பத்து) மண்டபத்தை சேர்ந்தார். அங்கு காலை 7.15 மணிக்கு அரையர் சேவை நடைபெற்றது.
பிற்பகல் 2 மணிக்கு திருப்பாவாடை கோஷ்டி, வெள்ளிச்சம்பா அமுது செய்தல், மாலை 4 மணிக்கு உபயக்காரர் மரியாதை ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து, இரவு7 மணிக்கு நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானத்தை சென்றடைந்தார்.
இந்த புறப்பாட்டின்போது, ரத்தின நீள்முடி கிரீடம், ரத்தின அபயஹஸ்தம், காசு மாலை, நெல்லிக்காய் மாலைகள் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு நம்பெருமாள் சேவை சாதித்தார்.
பகல் பத்து திருநாள் ஜன.1-ம்தேதி வரை நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, கோயில் ஊழியர்கள் செய்துள்ளனர்.