

அரசியலில் புதிய கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தியவர் 'சோ' ராமசாமி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
பிரபல பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகரும், நடிகருமான 'சோ' ராமசாமி இன்று (புதன்கிழமை) உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 82.
ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக சோவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. சோவுக்கு தலைவர்கள், திரையுலகைச் சார்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சோ உடலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.
அதற்குப் பிறகு திருமாவளவன் கூறுகையில், ''தமிழக அரசியலில் மூத்த தலைவர்களுடன் நட்புறவு கொண்டிருந்தவர் சோ. சோவின் ஆசி பெற்றவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவுக்கு உற்ற நண்பராக விளங்கியவர் சோ ராமசாமி.
அரசியலில் புதிய கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தியவர் சோ ராமசாமி. அரசியலில் மாறுபட்ட கோணத்தைக் கொண்டிருந்தவர். ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடுபவர்களை ஊக்கப்படுத்தியவர் சோ'' என்று கூறினார்.