சென்னையில் உச்சகட்ட பாதுகாப்பு: 10 அம்ச தகவல்கள்

சென்னையில் உச்சகட்ட பாதுகாப்பு: 10 அம்ச தகவல்கள்
Updated on
2 min read

திமுக தலைவர் கருணாநிதி, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வீடுகள் மற்றும் திமுக கட்சி அலுவலகமான அறிவாலயத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் திங்கட்கிழமை போடப்பட்டுள்ள பாதுகாப்பு நட்வடிக்கைகள் குறித்த முக்கியத் தகவல்கள்:

* சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் வருவதற்காக காலை முதலே போலீஸ் கான்வாய் அமைக்கப்பட்டிருந்தது.

* முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து நேற்று மாலையில் இருந்தே அடுத்தடுத்து தகவல்கள் வந்துகொண்டே இருந்ததால், அதிமுக தொண்டர்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க வெளி மாவட்டங்களில் இருந்து 20 ஆயிரம் போலீஸார் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். பெங்களூருவில் இருந்து 1,500 துணை ராணுவப்படையினரும் சென்னை வந்துள்ளனர்.

* சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க ஐ.ஜி.க்கள் சாரங்கன், ஜெயராமன் ஆகியோர் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

* அப்போலோ மருத்துவமனை வளாகம் அமைந்துள்ள ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலை முழுவதும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து இணை ஆணையர் பவானீஸ்வரி தலைமையில் சீல் வைக்கப்பட்டது.

* விடுப்பில் உள்ள அனைத்து போலீஸாரும் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு அனைத்து போலீஸாரும் தங்களது தலைமையகத்துக்கு வந்தனர். மாவட்டத்தில் உள்ளவர்கள் எஸ்பி அலுவலகத்துக்கு சென்றனர்.

* சென்னையில் செய்ய வேண்டிய பாதுகாப்பு குறித்து காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ், கூடுதல் ஆணையர்கள் எஸ்.என்.சேஷசாயி, சி.ஸ்ரீதர், கே.சங்கர் ஆகியோர் ஆணையர் அலுவலகத்தில் மதியம் அவசர ஆலோசனை நடத்தினர்.

* காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து சுமார் 22 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புக்காக சென்னையின் பல்வேறு இடங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டனர்.

* முன்னெச்சரிக்கையாக இன்று மாலையே பல பெட்ரோல் பங்க்குகள், கடைகள் அடைக்கப்பட்டன. பல பள்ளிகளுக்கு பாதியிலேயே விடுமுறை அளிக்கப்பட்டது. தனியார் நிறுவன ஊழியர்கள் வழக்கமான நேரத்தைவிட முன்னரே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

* மாலை 4 மணி அளவில் அப்போலோ மருத்துவமனையைச் சுற்றி பாதுகாப்பு 2 மடங்காக அதிகரிக்கப்பட்டது. கூடுதல் போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.

* சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீடு, ஆழ்வார்பேட்டையில் உள்ள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வீடு, தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் ஆகிய இடங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

* பேருந்து மற்றும் விரைவு ரயில்களில் வெளியூர் பயணத்தை பெரும்பாலான மக்கள் தவிர்த்தனர். பயணத்தை தவிர்க்க முடியாத சிலர் ரயில்களில் பயணம் செய்தனர். இதனால், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளில் கூட்டம் அதிகரித்தது. அடுத்த சில நாட்களுக்கு மக்கள் பயணத்தை ரத்து செய்ததால் விரைவு பேருந்துகள் டிக்கெட் முன்பதிவுகளில் 50 சதவீதமும், விரைவு ரயில்கள் டிக்கெட் முன்பதிவுகளில் 25 சதவீதம் ரத்து செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in