

சென்னை: கரோனா தொற்று 5-வது அலைமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெறுகிறது.
தமிழகத்தில் 2020 மார்ச் மாதம் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்றால், இதுவரை 35.94 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 38,049 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்றுடன் இணை நோய்கள் மற்றும் பிந்தைய பாதிப்புகளால் ஏராளமானோர் இறந்துள்ளனர்.
ஒற்றை இலக்கத்தில்.. இரண்டரை ஆண்டுகளில் கரோனா தொற்று மொத்தம் நான்கு அலைகளாக பரவியுள்ளது. தொற்றின் முதல், மூன்றாவது, நான்காவது அலையைவிட இரண்டாவது அலையில் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகமாகவே இருந்தது. கடந்த ஜுன் மாதம் தொற்றின் நான்காவது அலை பரவத் தொடங்கியது.
ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகபட்சமாக சுமார் 3 ஆயிரம் வரை சென்றது. பின்னர் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியது. தற்போது தினசரி தொற்று பாதிப்பு தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வருகிறது.
5-வது அலை அச்சம்: இந்நிலையில், சீனா, ஜப்பான் உட்பட பலவேறு நாடுகளில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. அதனால், தமிழகத்தில் கரோனா தொற்றின் 5-வது அலைஅச்சம் ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் முகக்கவசம் அணியுமாறு அரசு அறிவுறுத்தலை வழங்கிஉள்ளது.
கரோனா தொற்று காரணத்தால் 2021, 2022-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தமிழகத்தில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு ஒற்றை இலக்கத்துக்கு குறைந்துள்ள நிலையில், 2023-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு எவ்விதமான கட்டுப்பாடுகளும் இருக்காது என அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால், பல்வேறு நாடுகளில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், 2023-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் வருவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “சீனா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரானின் உருமாறிய பிஎப்7 கரோனா வைரஸ் பரவி வருகிறது. அந்த வைரஸ் தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கண்டறியப்படவில்லை.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ன மாதிரியான கட்டுப்பாடுகளை விதிப்பது என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது” என்றனர்.