வார்தா புயல் நிவாரணப் பணிகளில் மந்தம்: விஜயகாந்த் குற்றச்சாட்டு

வார்தா புயல் நிவாரணப் பணிகளில் மந்தம்: விஜயகாந்த் குற்றச்சாட்டு
Updated on
1 min read

'வார்தா' புயலால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் நிவாரணப் பணிகள் மந்தமாகவே நடைபெற்றுவருகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், '' 'வார்தா' புயல் சென்னையை நோக்கி வருகிறது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறபித்தது.

புயலுடன் பெய்த மழைநீரை உடனுக்குடன் அகற்றிட அரசு இயந்திரம் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் அறிவித்தார்கள். புயல் காற்று சுழல் காற்றாக அதிவேகத்தில் வீசியதால் சாலைகள் மற்றும் தெருக்களில் இருந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் விழுந்து சேதம் அடைந்ததால், மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது.

மின்சாரம் இல்லாததால் குடியிருப்புகளுக்கு தண்ணீர் வசதி கிடைக்காமலும், சாலைகளிலும், தெருக்களிலும் மக்கள் போக்குவரத்து சிரமத்திற்கு உள்ளாகினர். சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் போதுமான எண்ணிக்கை இல்லாததால் பணிகள் காலதாமதமாகிறது.

அதுபோல மின்சாரத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், விழுந்து கிடக்கும் மின்கம்பங்களையும், மின்சார விநியோகம் சீர்செய்யும் பணியும் துரிதப்படுத்த வேண்டும்.

ஆவடி அருகில் கோலடி என்கிற கிராமத்தில் அரசு பள்ளிக்கூடத்தில் மரங்கள் சாய்ந்து, பள்ளி மாணவர்கள் பள்ளிக்குள் செல்லமுடியாமல் தண்ணீர் தேங்கி கிடந்தது. இதுபோன்ற பல பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழக அமைச்சர் இரண்டு நாட்களில் அனைத்து பிரச்சினைகளும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இவர் சொன்ன பணிகள் பாதிக்கப்பட்ட எந்தப் பகுதிகளிலும் சரியான முறையில் பணிகள் நடைபெறவில்லை. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இருந்தும் அனைத்து நிவாரணப் பணிகளும் மந்தமாகவே நடைபெற்றுவருகிறது. சேதமடைந்த மரங்களை அகற்றிட, மின்சாரம் விநியோகம் முழுமையாக கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in