

வேலூர்: வேலூரில் மனம் திருந்திய கஞ்சா வழக்கு குற்றவாளி, காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் முன்னிலையில் சரணடைந்தார். அவருக்கு தேநீர் கடை வைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
வேலூர் தொரப்பாடியைச் சேர்ந்த கணேசன் மகன் ராஜேந்திரன் (42). காய்கறி வியாபாரம் செய்து வந்தவர் அதிக வருவாய் ஈட்ட வேண்டும் என்ற ஆசையில் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இது தொடர்பாக ராஜேந்திரன் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் தற்போது கஞ்சா தடுப்பு நடவடிக்கை தீவிரமாகியுள்ள நிலையில் மனம் திருந்திய ராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் முன்னிலையில் நேற்று சரணடைந்தார். இவர், மீது கடந்த ஓராண்டாக எந்த வழக்குகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் கூறும்போது, ‘‘ராஜேந்திரனை போன்று கஞ்சா, சாராயம், தொடர் குற்றச்செயல்கள் ஈடுபட்டு மனம் திருந்தி வாழ முன்வருவோ ருக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உரிய உதவிகள் செய்யப்படும். ராஜேந்திரனுக்கு தேநீர் கடை வைத்துக்கொடுக்கப்பட உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கஞ்சா தடுப்பு பணியில் கடந்த ஓராண்டில் 137 வழக்குகளில் 10 பெண்கள் உள்பட 198 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து, 322 கிலோ கஞ்சாவுடன் 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 29 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்’’ என்றார். மனம் திருந்தி வாழ முன்வருவோருக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உரிய உதவிகள் செய்யப்படும்.