

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை கடற்கரையை ஒட்டி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதைத் தொடர்ந்து, கனமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தயார் என்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் 29.10.2022 முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழைப் பெய்து வருகிறது. 1-10-2022 முதல் 22-12-2022 வரை 425 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவைக் (427.4 மி.மீ.) காட்டிலும் ஒரு விழுக்காடு குறைவு ஆகும்.
இந்திய வானிலை ஆய்வு மையம், தனது 23-12-2022 நாளிட்ட சிறப்பு வானிலை அறிவிக்கையில், தென் மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் நாகப்பட்டினத்திற்கு கிழக்கே 480 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 540 கி.மீ. தொலைவில் ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் இது மேற்கு தென்மேற்கு திசையில் குமரிக் கடல் பகுதியை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, 25.12.2022 தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைப் பெய்யக் கூடும்.
26.12.2022 தேனி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைப் பெய்யக் கூடும்.
மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக,25.12.2022 தமிழக கடற்கரை, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சீரற்ற வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மேலும் மணிக்கு 65 கி.மீ. வேகம் வரையிலான பலத்த காற்று வீசக்கூடும். கடல் மிகுந்த கொந்தளிப்புடன் காணப்படும்.
26.12.2022 தென் தமிழக கடற்கரை, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சீரற்ற வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மேலும் மணிக்கு 60 கி.மீ. வேகம் வரையிலான பலத்த காற்று வீசக்கூடும். கடல் மிகுந்த கொந்தளிப்புடன் காணப்படும்.
27.12.2022 இலட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மேலும் மணிக்கு 60 கி.மீ. வேகம் வரையிலான பலத்த காற்று வீசக்கூடும். கடல் மிகுந்த கொந்தளிப்புடன் காணப்படும்.
சீரற்ற வானிலை மற்றும் கடல் கொந்தளிப்பின் காரணமாக மீனவர்கள் தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய தமிழக கடற்கரை பகுதி, இலங்கை கடற்பகுதி, மன்னார் வளைகுடா, குமரிக்கடல், லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் தங்களது மீன் பிடி படகுகள், வல்லம் மற்றும் மீன் வலைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தமிழக முதல்வரின் அறிவுரையின் பேரில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் பலத்த காற்றுடன் பெய்யும் கனமழையை எதிர்கொள்ள பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.