

“ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட எஃகு கோட்டை, ராணுவக் கட்டுப்பாடுக் கொண்ட இயக்கம், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லாத கட்சி” என்றால் புகழ்பாடிக் கொண்டிருந்த அதிமுக கட்சியில் 2022-ம் ஆண்டு எழுந்த ஒற்றைத் தலைமை விவகாரத்தால் நிகழ்ந்த சம்பவங்களை விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு.
2019-ல் நடைபெற வேண்டிய அதிமுக அமைப்பு தேர்தல் கரோனாவால் தள்ளிப்போனது. இதையடுத்து, 2021-ம் ஆண்டு டிசம்பரில் பதவி வாரியாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி மற்றும் படிப்படியாக மாவட்டச் செயலர்கள், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டும். பின்னரே, தேர்தல் ஆணையத்தில் அதை சமர்ப்பிக்க முடியும். இதையொட்டி, அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ம் தேதி சென்னையில் நடைபெற இருந்தது.
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் வலியுறுத்தினர். இந்த விவகாரம் அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதிமுகவுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்க வலியுறுத்தி, சென்னையின் முக்கிய இடங்களில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டினர். எடப்பாடி பழனிசாமி தலைமையேற்க வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டினர். இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். இதனால், இருதரப்பினர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, பொதுக்குழுவை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து, உடனடியாக ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு மீது இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, விடிய விடிய விசாரணை நடத்தியது. பின்னர், பொதுக்குழுவை நடத்தலாம். ஆனால், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட 23 தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றலாம். மற்றவை குறித்து முடிவெடுக்கக் கூடாது என்று தீர்ப்பளித்தது.
சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் ஜூன் 23-ம் தேதி காலை 10 மணிக்கு அதிமுக பொதுக்குழு தொடங்கியது. ஓபிஎஸ் பொதுக்குழு கூட்டத்துக்கு வந்தார். அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதால், மேடைக்கு செல்லாமல் தனி அறையில் அமர்ந்திருந்தார்.பொதுக்குழுவுக்கு வந்த பழனிசாமிக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுக்குழு தீர்மானத்தை வாசிக்கும் முன், குறுக்கிட்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “அனைத்து தீர்மானங்களையும் இந்த பொதுக்குழு நிராகரிக்கிறது” என்று ஆவேசமாக பேசினார்.
இதைத்தொடர்ந்து அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழ்மகன் உசேன் தலைமையுரை ஆற்றினார். அவரிடம் 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்டு கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுவை சி.வி.சண்முகம் வழங்கினார்.பொதுக்குழு உறுப்பினர்களால் கையொப்பமிட்டு அளிக்கப்பட்ட ஒற்றைத் தலைமை குறித்த கோரிக்கையை ஏற்று, ஜூலை 11-ம் தேதி காலை 9.15 மணிக்கு மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
சட்டத்துக்கு புறம்பான இந்த தீர்மானத்தை எதிர்த்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என தெரிவித்துவிட்டு மேடையில் இருந்த ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். ஜூலை 11-ம் தேதி நடைபெற இருந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்றைய தினம்
ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன்அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தனது வாகனத்தில் வந்தார். இதனால் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்புக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டதால் அதிமுக அலுவலகத்துக்குள் போலீஸார் நுழைந்தனர். வன்முறையைத் தடுக்க அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஆர்டிஓ சீல் வைத்தார். இதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இபிஎஸ் தரப்பிடம் சாவியை ஒப்படைக்க உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம், டெல்லி விசிட் என இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பில் 2022 ஆம் ஆண்டில் ஏராளமான நிகழ்வுகள் அரங்கேறின. ஓபிஎஸ் தொடர்ந்துள்ள வழக்கை விசாரித்து முடிக்கும் வரை பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து ஓபிஎஸ், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற பண்ருட்டி ராமச்சந்திரன், ஏ.சி.சண்முகம் மற்றும் வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் மீண்டும் கட்சியில் இணைத்து தனது பலத்தை நிரூபிக்க முயற்சித்து வருகிறார்.
இதற்கெல்லாம் வளைந்து கொடுக்காத இபிஎஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள் ஆதரவுடன் கட்சியில் தனக்கான இடத்தை வலுவாக்கிக் கொண்டார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் கட்சி வேட்டி, கட்சிக் கொடி, கட்சியின் லெட்டர் ஹெட்டை ஓபிஎஸ் பயன்படுத்தக்கூடாது என வக்கீல் நோட்டீஸ் அனுப்பிவிட்டு, கட்சியின் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்ற இலக்கை நோக்கி நகர்ந்து வருகிறார் இபிஎஸ்.