

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் பெயரில் விதிகளை மீறி வெளியிட்ட அறிக்கையை திரும்பப்பெற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு, பழனிசாமி தரப்பு அதிமுக தலைமை அலுவலக வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக பழனிசாமி தரப்பு அதிமுக தலைமை அலுவலக வழக்கறிஞர், ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது:
நிர்வாகிகள் கூட்டம்: கடந்த டிச.17-ம் தேதி, விதிகளை மீறி, ‘அதிமுக தலைமை அலுவலக அறிவிப்பு’ என தலைப்பிட்டு, விதிகளுக்கு புறம்பாக தங்களை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என குறிப்பிட்டு, கட்சி தலைமை நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை சென்னை வேப்பேரியில் டிச.21-ம் தேதி கூட்ட இருப்பதாக அதில் தெரிவித்து இருப்பதாகவும், மேலும் சட்டவிரோதமாக அலுவலக முத்திரையைப் பயன்படுத்தி இருப்பதாகவும் எனது கட்சிக்காரர் கூறியிருக்கிறார்.
கடந்த ஜூலை 11-ம் தேதி இயற்றப்பட்ட அதிமுக பொதுக்குழு தீர்மானத்தின்படி, கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தாங்கள் நீக்கப்பட்டுள்ளீர்கள். அதனால் உங்களை கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் என அழைத்துக் கொள்ள உங்களுக்கு உரிமை இல்லை. இன்றைய நிலவரப்படி அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி இல்லை.
உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, அதிமுக தலைமை அலுவலகம், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் என்பதையும் உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது: எனவே அதிமுகவைச் சாராதவர் கட்சி பெயரையும், தன்னை ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர்என சித்தரிக்கவும் எந்த உரிமையும் இல்லை. அவ்வாறு பயன்படுத்துவது உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது. அவ்வாறு பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனவே விதிகளை மீறி அதிமுக கட்சி தலைமை அலுவலகம் பெயரில், அதிமுக முத்திரையைப் பயன்படுத்தி தாங்கள் வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் சிவில் மற்றும் குற்ற நடவடிக்கை எடுக்க நேரிடும். இவ்வாறு நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.