Published : 23 Dec 2022 06:24 AM
Last Updated : 23 Dec 2022 06:24 AM

ரூ.22.84 கோடி மதிப்பில் ஆம்புலன்ஸ் வாகன சேவை; அரசு மருத்துவ கல்லூரிகளில் ‘மனம்’ திட்டம்: ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 75 அதிநவீன மருத்துவ உபகரணங்கள் கொண்ட ஆம்புலன்ஸ் வாகன சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். உடன், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர். படம்: ம.பிரபு

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மன நல காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ. 22.84 கோடி மதிப்பில், 75 நவீன உபகரணங்கள் கொண்ட 108 ஆம்புலன்ஸ் வாகன சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மேலும், 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களின் மன நலம் காக்கும் ‘மனம்’ திட்டத்தையும் தொடங்கிவைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 2008-ல் தொடங்கப்பட்ட, 108 இலவச ஆம்புலன்ஸ் சேவைத் திட்டத்தால், கடந்த ஆண்டு மே 7 முதல் இந்த ஆண்டு நவம்பர் வரை 9.10 லட்சம் கர்ப்பிணிகள் உள்ளிட்ட 32 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.

திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இந்த திட்டத்துக்கு 208 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 130 மேம்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, ரூ. 22.84 கோடி மதிப்பில், 75 அதிநவீன மருத்துவ உபகரணங்கள் கொண்ட, மேம்படுத்தப்பட்ட புதிய ஆம்புலன்ஸ் வாகன சேவையை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், துணை மருத்துவக் கல்லூரிகளில் ‘மனம்’ என்ற பெயரில் மருத்துவ மாணவர்களின் மனநலன் காக்கும் சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டு ‘மனநல நல்லாதரவு மன்றங்கள்’ அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவர்களுக்கு, உடனடியாக மனநல மருத்துவரின் ஆலோசனைக்காக ‘மனம்’ அலைபேசி உதவி எண் 14416 பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இவற்றையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். படிப்படியாக இந்த திட்டம் அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

மேலும், மன நல சிகிச்சையில் இருந்து குணமடைந்தவர்கள் பயனடையும் வகையில், சென்னை அரசு மன நலக் காப்பகத்தில் ரூ.2.36 கோடியில், 14 அறைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை பராமரிப்பு மையத்தையும் முதல்வர் திறந்துவைத்தார்.

சுகாதாரத் துறை மானியக் கோரிக்கையில், அறிவித்தபடி, மனநலம் மற்றும் நரம்புசார் மருத்துவ சேவைகளை வழங்குவதற்கான, மாநில அளவிலான தமிழ்நாடு மனநல மற்றும் நரம்பியல் நிறுவனம் (TNIMHANS) என்ற ஒப்புயர்வு மையம் சென்னை அரசு மனநல மருத்துவமனையில் ரூ.40 கோடியில் நிறுவப்பட உள்ளது. இந்தக் கட்டிடத்தின் முப்பரிமாண வரைபடத்தை முதல்வர் வெளியிட்டார்.

இதுதவிர, பள்ளி மாணவர்களின் மனநல மேம்பாட்டுக்கான ஆசிரியர் கையேடு மற்றும் தேசிய வளர் இளம் பருவத்தினர் நலத் திட்ட பயிற்சிக் கையேட்டையும் முதல்வர் வெளியிட்டார்.

தொடர்ந்து, மகப்பேறு சிக்கல்கள் உள்ள கர்ப்பிணிகளைக் கண்டறிந்து, உரிய சிகிச்சை வழங்குவதில் தேசிய அளவில் முதலிடம் பெற்றமைக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய விருதை, தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

அதேபோல, சுகமான மகப்பேறு நிலையங்களைத் தேர்ந்தெடுப்பதில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழகம் 2-ம் இடம் பெற்றுள்ளது. இதற்கான விருதை மருத்தவக் கல்வி இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு இயக்குநர் ஆகியோர் முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

மேலும், முதல்வர் முன்னிலையில், அரசு மன நல நிலையப் பயன்பாட்டுக்காக 3 மின்சார மிதிவண்டிகளை ஏபிஎஸ் மோட்டார்ஸ் நிறுவன மேலாண் இயக்குநர் எஸ்.ரமேஷ் சுப்பிரமணியன், மனநல நிலைய இயக்குநரிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, மருத்துவத் துறைச் செயலர் ப.செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x