

சென்னை: தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக 2020-21-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. மேலும், அந்த ஆண்டு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழில் ‘கரோனா பேட்ஜ்’ எனவும், அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி எனவும் குறிப்பிட்டு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவில் 10-ம் வகுப்பு மதிப்பெண் உள்ளீடு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு சான்றிதழில் மதிப்பெண்கள் ஏதும் வழங்கப்படாததால் ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
விண்ணப்பத்தில் 10-ம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கூறியிருந்தார்.
இதுதொடர்பாக அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த விவகாரத்தை தேசிய தேர்வுகள் முகமையின் (என்டிஏ) கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். என்டிஏ நடத்தும் போட்டித் தேர்வில் தமிழக மாணவர்கள் 10-ம் வகுப்பு மதிப்பெண்ணை பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று என்டிஏ உறுதி அளித்திருக்கிறது.
எனவே, ஜேஇஇ தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பதற்றமடைய வேண்டாம். ஜேஇஇ தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, ஐஐடி.களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முழு செலவையும் அரசே ஏற்கிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.