Published : 23 Dec 2022 07:42 AM
Last Updated : 23 Dec 2022 07:42 AM
கும்பகோணம்: திமுகவினர் என்னை மேயராக பணி செய்ய விடாமல் தடுத்து, மிரட்டுகின்றனர். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைமையிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளேன் என கும்பகோணம் மேயர் சரவணன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் மாநகராட்சி மேயராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த க.சரவணனும், துணை மேயராக திமுகவைச் சேர்ந்த சு.ப.தமிழழகனும் உள்ளனர். மாமன்ற கூட்டங்கள் நடைபெறும்போது, கவுன்சிலர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மேயர் பதில் அளிப்பதற்கு பதில், பெரும்பாலும் துணை மேயர் சு.ப.தமிழழகனே பதிலளிப்பார். இதுகுறித்து அரசியல் கட்சி பிரமுகர்களிடம் விமர்சனங்கள் இருந்து வந்தன.
இந்நிலையில்,கும்பகோணம் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில், 'மாநகராட்சியின் செயல் தலைவரே' என துணை மேயரை குறிப்பிட்டு கும்பகோணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதன் மூலம் தனது பதவிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக மேயர் க.சரவணன் குறிப்பிட்டார்.
இதுகுறித்து அவர் நேற்று 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: காங்கிரஸுக்கு கும்பகோணம் மேயர் பதவி ஒதுக்கப்பட்டபோது, சு.ப.தமிழழகன், காங்கிரஸ் மாவட்ட தலைவரிடம் சென்று, பதவியைத் தனக்கு விட்டுக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர், மேயர் பதவியை கட்சித் தலைமை ஒதுக்கியுள்ளது. மேயராக சரவணன் இருந்தால், நீங்கள் செயல் தலைவராக செயல்படுங்கள் என்று யதார்த்தமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், துணைமேயர் சு.ப.தமிழழகனின் பிறந்தநாளையொட்டி, குடந்தை மாநகராட்சியின் செயல் தலைவரே என துணைமேயர் சு.ப.தமிழழகனை குறிப்பிட்டு திமுக கவுன்சிலரே சுவரொட்டி ஒட்டியுள்ளார். இதுகுறித்து மாமன்ற கூட்டத்தில் பேசும்போது, செயல் தலைவர் என்ற மாநகராட்சி பதவியைக் குறிப்பிட்டு சுவரொட்டி ஒட்ட யார் அதிகாரம் கொடுத்தனர்?. பாரம்பரியமாக அரசியல் கட்சியில் உள்ளவருக்கு இதுபோல சுவரொட்டி ஒட்டலாமா என தெரியாதா என கேள்வி எழுப்பினேன்.
அதற்கு உரிய பதில் அளிக்காத திமுக கவுன்சிலர்கள், என்னை சூழந்து கொண்டு, நாங்கள் வைக்கும் தீர்மானத்தில் கையெழுத்து மட்டும் போட வேண்டும், தீர்மானத்தை நாங்கள் நிறைவேற்றிக் கொள்கிறோம். வார்டுகளுக்கு ஆய்வு மேற்கொள்ள வரக் கூடாது. நாங்கள் பெரும்பான்மையாக உள்ளோம். கட்சிக்காக பார்க்கிறோம் என மிரட்டல் விடுத்து பேசினர். அப்போது, துணை மேயர் சு.ப.தமிழழகன் கேட்டு கொண்டதாலேயே, நான் பேசியதை திரும்பப் பெற்றுக் கொண்டேன்.
மேயராக என்னைச் செயல்பட விடாமல் திமுகவினர் தடுப்பது குறித்தும், மிரட்டல் விடுப்பது குறித்தும் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் புகார் அளிக்கவுள்ளேன் என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT