

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பழுது மற்றும் பராமரிப்பு பணிக்காக மூன்று அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால், 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சொந்தமான அனல்மின் நிலையம் தூத்துக்குடியில் செயல்படுகிறது. இங்கு, தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 5 அலகுகள் செயல்படுகின்றன. மொத்தம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
பழமையான அனல்மின் நிலையம் என்பதாலும், முழு அளவிலான மின் உற்பத்திக்காக தொடர்ச்சியாக இயக்கப்படுவதாலும் இந்த அனல்மின் நிலைய அலகுகளில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது.
அனல்மின் நிலைய 4-வது அலகில் ஏற்கெனவே 40 நாள் பராமரிப்பு பணி கடந்த மாதம் தான் முடிவடைந்தது. சிறு சிறு கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டதால், ஓரிரு நாள்கள் மட்டும் நிறுத்தி பராமரிப்பு பணி மேற்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்தனர். வியாழக்கிழமை நள்ளிரவு உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இச்சூழ்நிலையில், 2-வது அலகில் வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவிலும், 3-வது அலகில் காலை 11.45 மணியளவிலும் கொதிகலன் குழாயில் ஓட்டை விழுந்தது. இவ்விரு அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஒரே நேரத்தில் 3 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் 630 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
2-வது அலகில் ஏற்பட்ட பழுது பிற்பகல் 2 மணியளவில் சரி செய்யப்பட்டு மீண்டும் செயல்படத் தொடங்கியது. 3-வது அலகில் ஏற்பட்ட பழுதையும் சீரமைக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.