

வரும் 20-ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறவிருந்த அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் 20-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறுவதாக இருந்த தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காரணத்தால் ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு சளித் தொந்தரவு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தொண்டை, நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு டிரக்யாஸ்டமி கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அரசியல் களம் பரபரப்பாகியுள்ள நிலையில் திமுக பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் தலைமை பொறுப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பொதுக்குழு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.