

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: கரோனா பேரிடருக்கு பிறகு இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. அதேபோல் பள்ளிகளுக்கும் அரையாண்டு விடுமுறையும் விடப்பட்டுள்ளது.
இதனையொட்டி, சென்னையில்இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புவோர் வெள்ளிக்கிழமை முதலே பயணிக்கத் தொடங்கி விடுவர். எனவே பொதுமக்கள் அதிக அளவில் வெளியூர்செல்லக்கூடும் என்பதால் கூடுதல்பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி, இன்று (டிச.23) சென்னையில் இருந்து 300 சிறப்புபேருந்துகளையும், நாளை 300சிறப்பு பேருந்துகளையும் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதிகமாக பேருந்துகள் தேவைப்பட்டாலும் இயக்குவதற்கு போதியபேருந்துகள் உள்ளன. பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வருவதற்கும் போதிய பேருந்துகளை இயக்க தயாராக உள்ளோம் என்றனர்.