Published : 23 Dec 2022 06:13 AM
Last Updated : 23 Dec 2022 06:13 AM
சென்னை: வேளச்சேரி ரயில் நிலையத்தை ஒட்டி தென்பகுதியில் வாகன மேற்கூரை வசதி இல்லாததால், இருசக்கர வாகனங்கள் மழை, வெயிலில் பாதிக்கப்படும் நிலை உள்ளது.இந்த வாகன நிறுத்துமிடத்தில் மேற்கூரை அமைக்க பயணிகள்கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தில்நாள்தோறும் 150 மின்சார ரயில்சேவைகள் இயக்கப்படுகின்றன. தினமும் ஒரு லட்சம் பேர் வரையில் பயணம் செய்கின்றனர். வேளச்சேரியைச் சுற்றியுள்ள ஏராளமான பயணிகள் தங்கள் இருசக்கர வாகனங்களில் இங்குவந்து, நிறுத்திவிட்டு, மின்சாரரயிலில் பயணம் செய்கின்றனர்.
இங்குள்ள வாகன நிறுத்துமிடத்தில்வடக்கு, தென் பகுதியில் தலா ஒரு வாகன நிறுத்துமிடம் உள்ளது.இவற்றில், தென் பகுதியில் வாகன நிறுத்துமிடத்தில் மேற்கூரைகள் இல்லாமல் வாகனங்கள் மழை, வெயிலில் பாதிக்கப்படுகின்றன.
இதுகுறித்து வேளச்சேரியைச் சேர்ந்த பயணிகள் சிலர் கூறுகையில், ``வேளச்சேரி ரயில் நிலையத்தில் பயணிகளின் வாகனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், வாகன நிறுத்துமிடம் இருக்க வேண்டும். கடும் வெயில், கனமழை காலத்தில் இருசக்கர வாகனங்கள் பாதிப்படைவதைத் தடுக்க, வாகன நிறுத்ததில் மேற்கூரை அமைத்து, சிசிடிவி. கேமராக்களை பொருத்திப் பாதுகாக்க வேண்டும்'' என்றனர்.
இதுகுறித்து சென்னை கோட்ட ரயில்வே அதிகாரி கூறும்போது, ``ரயில் நிலையங்களில் வாகன நிறுத்த ஒப்பந்தம் முடிந்தவுடன், புதிய ஒப்பந்தத்தை வழங்கி வருகிறோம். வேளச்சேரி ரயில் நிலையத்தில் அண்மையில்தான், வாகன நிறுத்துமிடம் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
இங்கு தென்பகுதி வாகன நிறுத்துமிடத்தில் மேற்கூரை அமைக்கும் பணி 2 வாரங்களில் தொடங்கும். வாகன நிறுத்துமிடத்தை டெண்டர்எடுக்கும் நிறுவனங்களுக்கு சிலவிதிமுறைகளை ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதில்,வாகன நிறுத்துமிடத்தில் மேற்கூரைஅமைப்பது, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, வாகனங்களைப் பாதுகாப்பது போன்ற விதிமுறைகள் அடங்கும். விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாத நிறுவனங்களில் ஒப்பந்தத்தை ரத்துசெய்யவும் முடியும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT