Published : 23 Dec 2022 06:27 AM
Last Updated : 23 Dec 2022 06:27 AM
சென்னை: சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படங்களாக தேர்வான `கிடா', `கசடதபற' உள்ளிட்ட திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ஐசிஏஎப்) சார்பில் 20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, கடந்த 15-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் 51 நாடுகளில் இருந்து 102 படங்கள் திரையிடப்பட்டன. நிறைவு நாள் நிகழ்ச்சி, சத்யம் திரையரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
திரைப்பட விழா போட்டியில் தமிழ் பிரிவில் ஆதார், இரவின் நிழல், இறுதிப் பக்கம், மாமனிதன், கார்கி, கசடதபற, நட்சத்திரம் நகர்கிறது, கிடா, பிகினிங், கோட், பபூன், யுத்த காண்டம் ஆகிய 12படங்கள் பங்கேற்றன. மொத்தமாக இரு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. குறும்படங்களுக்கான பிரிவில் சிறந்ததிரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த ஒலிப்பதிவு ஆகியவற்றுக்கான விருதுகள், ‘ஊமை விழி’ படத்துக்கு வழங்கப்பட்டது. அழகி குறும்படத்துக்காக சிறந்த நடிகர் விருது லோகநாதனுக்கு வழங்கப்பட்டது.
திரைப்படங்கள் பிரிவில் முதல்பரிசை ‘கிடா’வும், இரண்டாவது பரிசை ‘கசடதபற’ படமும் பெற்றன. சிறந்த நடிகருக்கான விருதுநடிகர்கள் விஜய் சேதுபதி (மாமனிதன்), பூ ராமு (கிடா)ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. சிறப்பு நடுவர் விருது ‘இரவின் நிழல்’ படத்துக்கும், சிறப்பு சான்றிதழ் விருது ‘ஆதார்’ படத்துக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த ஒலிப்பதிவாளர் அந்தோணி பிஜே ரூபன் (நட்சத்திரம் நகர்கிறது), சிறந்தபடத்தொகுப்பாளர் சிஎஸ் பிரேம் (பிகினிங்), ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் (இரவின் நிழல்), சிறந்த நடிகை சாய் பல்லவி (கார்கி) ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
வாழ்நாள் சாதனையாளருக்கான விருதுக்கு இயக்குநர் பாரதிராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவருக்கு விருது வழங்கப்பட உள்ளதாகவும் ஐசிஏஎப் அமைப்பு தெரிவித்துள்ளது.
எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரி தலைவர் நடிகர் ராஜேஷ், இந்தோ சினி அப்ரிசியேஷன் தலைவர் சிவன் கண்ணன், பொதுச்செயலர் இ.தங்கராஜ், தயாரிப்பாளர் கேயார்உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT