நெய்வேலி என்எல்சியில் தீ விபத்து; தொழிலாளி உயிரிழப்பு: 4 பேர் காயங்களுடன் சிகிச்சை

நெய்வேலி என்எல்சியில் தீ விபத்து; தொழிலாளி உயிரிழப்பு: 4 பேர் காயங்களுடன் சிகிச்சை
Updated on
1 min read

கடலூர்: நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் புதிய அனல் மின்நிலையத்தில் தீ விபத்துஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த 4 தொழிலாளர்கள் மேல்சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நிரந்தர பணியாளர்கள், இன்கோசர்வ் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என சுமார் 16 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிறுவனத்தில் முதல் சுரங்கம், இரண்டாவது சுரங்கம், முதல் சுரங்க விரிவாக்கம் ஆகிய பழுப்பு நிலக்கரி சுரங்கங்களும், 2-வது அனல் மின்நிலையம், 2-வது அனல் மின்நிலைய விரிவாக்கம், புதிய அனல் மின்நிலையம் ஆகிய 3 அனல் மின்நிலையங்களும் உள்ளன.

பாய்லரில் அதிக அழுத்தம்: இந்நிலையில், நேற்று மதியம் சுமார் 1 மணி அளவில் புதிய அனல் மின்நிலையத்தில் நிலக்கரியை பாய்லரில் அள்ளும் பணியில் 4 இன்கோசர்வ் தொழிலாளர்கள் மற்றும் ஒரு நிரந்தர தொழிலாளர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பாய்லரில் ஏற்பட்ட அதிக அழுத்தம் காரணமாக அப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதில் பணியில் இருந்த நெய்வேலி அருகே உள்ள வீரட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் திருநாவுக்கரசு(47), வீரசிங்ககுப்பம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி மகன் தட்சிணாமூர்த்தி ( 54), ஊத்தங்கால் கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி மகன் செல்வராஜ் ( 47),நெய்வேலி 5-வது வட்டப்பகுதியைச் சேர்ந்தகண்ணையன் மகன் சுரேஷ் (35), வடலூர் அருகே உள்ள கோட்டகம் கிராமத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி மகன் செந்தில்குமார் (34) ஆகிய 5 தொழிலாளர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

சக தொழிலாளிகள் ஓடிச்சென்று 5 பேரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் என்எல்சி பொது மருத்துவமனையில் சேர்ந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 5 பேருக்கும் முதலுதவி சிசிச்சை அளிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த, காயமடைந்தவர்களின் உறவினர்கள்என்எல்சி பொது மருத்துவமனையில் குவிந்தனர். மேலும், மருத்துவமனைக்கு என்எல்சி நிறுவனதலைவர் ராகேஷ் குமார், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் உள்ளிட்டோர் சென்றுபார்வையிட்டனர்.

பின்னர் 5 பேரையும் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில், இன்கோசர்வ் தொழிலாளி திருநாவுக்கரசு நேற்று மாலை உயிரிழந்தார்.

இதுகுறித்து நெய்வேலி தெர்மல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட புதிய அனல் மின்நிலையத்தில் என்எல்சி தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in