Published : 23 Dec 2022 06:48 AM
Last Updated : 23 Dec 2022 06:48 AM

பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர தனித் தேர்வர் பதிவு செய்யலாம்: அரசு தேர்வுத்துறை இயக்குநர் தகவல்

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர தனித் தேர்வர்கள் பதிவு செய்யலாம் என்று அரசு தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பதிவுக் கட்டணம் ரூ.125: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத விரும்பும் நேரடித் தனித் தேர்வர்களுள், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேரத் தவறியவர்கள் வரும் 26-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களை அனுகி, ரூ.125 பதிவுக் கட்டணம் செலுத்தி, தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்தவர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களால் ஒதுக்கீடு செய்யப்படும் பள்ளிகளுக்குச் சென்று, அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.

ஜன. 1 வரை விண்ணப்பிக்கலாம்: மேலும், பதிவுக் கட்டணம் செலுத்திய உடன், மாவட்டக் கல்வி அலுவலரால் வழங்கப்படும் விண்ணப்ப அத்தாட்சி சீட்டைப் பெற்று, அவரவர் கல்வி மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு தேர்வு சேவை மையத்தில் சமர்ப்பித்து, பொதுத் தேர்வுக்கு அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு வரும் 26-ம் தேதி முதல்ஜனவரி 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 26 முதல் 30-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பயிற்சி வகுப்புகள் நடைபெறும் நாள், மையம் போன்ற விவரங்களை அந்தந்த மாவட்டக் கல்விஅலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x