

'வார்தா' புயல் பாதிப்பால் தொற்றுநோய்கள் வராமல் தடுக்க சுகாதாரத்துறை சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நோய் தடுப்பு பணிகளைப் பார்வையிடும் வகையில், சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டவளாகத்தில் சென்னை மாநகரப்பகுதியில் செயல்படும் குழுக்கள் சார்ந்த பணிகளை இன்று பார்வையிட்டார்.
இதையடுத்து 'வார்தா' புயல் பாதித்த பகுதிகளான சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சுகாதாரத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து நோய் தடுப்பு பணிகளுக்கு ஈடுபடுத்தப்படும் நடமாடும் மருத்துவக் குழுக்கள், 108 அவரகால ஆம்புலன்ஸ் சேவை ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.
தமிழக அரசு 'வார்தா' புயல் காரணமாக மக்களுக்கு எந்தவித தொற்றுநோயும் ஏற்படாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் உரிய தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் வண்ணம் மருத்துவ முகாம்கள், நோய்வராமல் தடுக்க நடமாடும் மருத்துவக் குழுக்கள், பாதுக்காக்கப்பட்ட குடிதண்ணீரை உறுதி செய்ய குளோரினேசன் கண்காணிப்புக் குழுக்கள், கொசு மற்றும் ஈ வராமல் தடுக்க பூச்சியியல் வல்லுநர் குழுக்கள், உணவு பாதுகாப்பு குழுக்கள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ப்ளீச்சிங் பவுடர் மற்றும் குளோரின் திரவமும் பயன்படுத்தப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்படுகிறது. அனைத்துப் பணிகளிலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு எந்தவித தொற்று நோய்களும் வராமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் சுகாதாரத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கும் தேவையான ரூ.90 கோடி மதிப்பிலான மருந்துகள் தமிழகம் முழுவதும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது'' என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.