திருநாவுக்கரசர் - இளங்கோவன் மோதல் முற்றுகிறது: ‘திடமான மனநிலை இல்லாதவர்’ என பரஸ்பரம் விமர்சனம்

திருநாவுக்கரசர் - இளங்கோவன் மோதல் முற்றுகிறது: ‘திடமான மனநிலை இல்லாதவர்’ என பரஸ்பரம் விமர்சனம்
Updated on
2 min read

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலை வர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோருக்கு இடையே மோதல் முற்றியுள்ளது. ‘திடமான மனநிலை இல்லாதவர்’ என ஒருவருக்கொரு வர் கடுமையாக குற்றம்சாட்டி வருவதால் தமிழக காங்கிரஸில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெய லலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு கடந்த 15-ம் தேதி பதிலளித்த திருநாவுக்கரசர், ‘‘வெள்ளை அறிக்கை கேட்பதால் ஜெயலலிதா உயிரோடு வரப்போவதில்லை. எனவே, வெள்ளை அறிக்கையோ, கறுப்பு அறிக்கையோ தேவை யில்லை’’ என்றார்.

திருநாவுக்கரசரின் இந்தக் கருத்துக்கு மறுநாளே கடும் கண்டனம் தெரிவித்த தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ‘‘ஜெய லலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை தேவையில்லை என திரு நாவுக்கரசர் கூறியிருப்பது அவரது சொந்தக் கருத்து’’ எனக் கூறி யிருந்தார்.

இது தொடர்பாக நேற்று செய்தி யாளர்களிடம் பேசிய திருநாவுக் கரசர், ‘‘ஜெயலலிதா மக்கள் செல் வாக்கு மிக்க தலைவர். அவரது மறைவு பேரிழப்பாகும். அவருடன் பணியாற்றியவன் என்ற துயரத் தில்தான் ஜெயலலிதாவுக்கு அளிக் கப்பட்ட சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை தேவையில்லை என தெரிவித்தேன். ஆனால், சிலர் இதை ராஜீவ் காந்தி கொலையோடு ஒப்பிட்டு பேசியுள்ளனர். அதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இப்படி பேசியவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகத்தான் இருக்க முடியும்’’ என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

அவருக்கு பதிலளிக்கும் வகை யிலே நேற்று மாலை இளங்கோவன் வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

ஜெயலலிதாவுக்கு அளிக்கப் பட்ட சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மு.க.ஸ்டாலின், ராமதாஸ் ஆகி யோர் கோரிக்கை விடுத்திருந்த னர். அதற்கு பதிலளித்த திருநாவுக் கரசர், வெள்ளை அறிக்கை வெளியிடுவதால் ஜெயலலிதா உயிரோடு வரப்போவதில்லை எனக் கூறியிருந்தார். இது தமிழக மக்களுக்கும், அதிமுக வின் விசுவாசமிக்க தொண்டர் களுக்கும் பெரும் அதிர்ச்சி அளிப் பதாக இருந்தது. இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை தேவை எனக் கூறினேன்.

இதற்காக என்னை மனநிலை பாதிக்கப்பட்டவர் என திருநாவுக் கரசர் கூறியிருக்கிறார். அதிமுக வில் இருந்திருந்தால் முதல்வராக இருந்திருப்பேன் என அவர் பேசி வருகிறார். மனநிலை பாதிக்கப் படாமல் திடமனதோடு இருப்பது சரியானால் அவர் இப்படி பேசியிருக்க மாட்டார். காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்து கொண்டு அதிமுகவில் இருந்திருந்தால் முதல்வராகி இருப்பேன் என சிந்திப்பதுதான் திடமான மனநிலையா?

வெள்ளை அறிக்கை வேண் டாம் எனக் கூறியது காங்கிரஸ் கட்சியின் கருத்து என அவர் கூறியிருக்கிறார். அப்படியெனில் இதுகுறித்து கட்சியின் செயற் குழு, மாவட்டத் தலைவர்களிடம் விவாதித்தாரா? மேலிடப் பொறுப் பாளர் முகுல் வாஸ்னிக்கிடம் ஆலோசித்தாரா?

ஜெயலலிதாவோடு பணி யாற்றியதால் வெள்ளை அறிக்கை வேண்டாம் என சொன்னதாக கூறி யிருக்கிறார். பாஜகவில் இருந்த போது பிரதமர் மோடியுடனும் அவர் பணியாற்றியுள்ளார். எனவே, பணமதிப்பு நீக்க நடவடிக் கையையும் ஆதரித்து, அதை காங்கிரஸ் கட்சியின் கருத்து எனக் கூறுவாரா?

இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.

திருநாவுக்கரசர் - இளங்கோவன் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் காங்கிரஸ் கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in